Congress also not done this Did you ask them? why Are you asking us Said Nirmala Seetharaman

மதுரை

காங்கிரஸ் ஆட்சியின்போதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை அப்போது ஏன் கேள்வி எழுப்பவில்லை? எங்களை மட்டும் கேள்வி கேட்கிறீர்களே என்கிறார் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன்.

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி செல்ல சென்னையில் இருந்து விமானத்தில் மதுரை வந்த இராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

அதில் அவர், "இந்தியா முழுவதும் உள்ள மாவட்டங்களில் 115 மாவட்டங்கள் பின்தங்கியுள்ளன. அந்த மாவட்டங்களின் நிலையை உயர்த்த மத்திய அரசு நிதி உதவி செய்து வருகிறது. இந்த பட்டியலில் உள்ள இராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களுக்கு நான் பொறுப்பேற்றுள்ளேன். 

மத்திய அரசு மேற்கொண்டு வரும் திட்டத்தை செயல்படுத்தாமல் தாமதம் செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இந்த இரண்டு மாவட்டங்களில் 36 கிராமங்களில் ஆதி திராவிட சமுதாயத்தினர் அதிகம் வசித்து வருகின்றனர். அந்த சமுதாயத்திற்கு அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்ய மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு தன்னிச்சையாக செயல்பட முடியாது. கர்நாடக தேர்தலை மனதில் வைத்து இதில் மத்திய அரசு செயல்படவில்லை. 

காங்கிரஸ் ஆட்சியின்போதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை. காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இருந்தன. அப்போது ஏன் கேள்வி எழுப்பவில்லை? இந்த விவகாரத்தில் மாநில அரசுகளுடன் பேசி நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் கூறினார்.