சோனியா காந்தியின் நிழல், நேரு குடும்பத்தின் கைப்பாவை,  மௌன மோகன் சிங்... மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, அவரைப் பற்றி பாஜக வைத்த விமர்சனங்கள்தான் இவை. இப்போது இந்த விமர்சங்கள் எல்லாமே சினிமாகிவிட்டது. ‘தி ஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ என்ற பெயரில் வெளியாக உள்ள இந்தப் படம், தற்போது தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

பிரதமர் மன்மோகன் சிங் பதவியில் இருந்தபோது, அவரது ஊடக ஆலோசகராக பதவி வகித்தவர் எழுதிய புத்தகம்தான் ‘தி ஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர்’. அந்தப் பெயரிலேயே இந்தப் படமும் வெளியாக உள்ளது. மன்மோகன் சிங் வேடத்தில் இந்தி நடிகர் அனுபம் கெர் நடித்திருக்கிறார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி குடும்பத்தின் அதிகாரத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிக்கித் தவித்ததாக இந்தப் படத்தின் கதைக் கரு கூறுகிறது. பெரும் ஆவலை ஏற்படுத்தியிருந்த இந்தப் படம் ஜனவரி 11 அன்று வெளியாக உள்ளது. அந்தப் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி தேசிய அரசியலில் பேசு பொருளாக மாறியுள்ளது.

அந்த படத்தின் டிரைலர் காட்சிகளே காங்கிரஸ் கட்சிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள். ஆனால், இந்தப் படத்தை பாஜகவினர் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திவருகிறார்கள். படத்தின்  டிரைலர் காட்சியை கட்சியின் அதிகாரபூர்வ சமூக ஊடகங்களின் கணக்கில் வெளியிட்டு, இந்த நாட்டை எப்படி சீரழித்தார்கள் என்ற வகையில் பாஜக பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது. படம் வெளியாவதற்கு முன்பு, அந்தப் படத்தை முழுமையாக எங்களிடம் திரையிட்டு காட்ட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே மத்தியபிரதேசத்தில் புதிதாகப் பதவியேற்ற காங்கிரஸ் அரசு, இந்தப் படத்துக்கு தடை விதித்திருப்பதாக பாஜகவினர் பிரச்சாரம் மேற்கொண்டுவருகிறார்கள். ஆனால், இதை மறுத்துள்ள காங்கிரஸ் கட்சி, படத்துக்கு எதிராக எந்தத் தடையும் விதிக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.