தமிழகத்தில் நிலவும் குழப்பமான அரசியல் சூழலில் ஆதாயம் தேடும் நடவடிக்கையில் பாரதிய ஜனதா கட்சி ஈடுபட்டுள்ளது. மாநில ஆளுநருக்கு எந்த விதமான உத்தரவும் அரசு பிறப்பிப்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

ராஜினாமா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஓ. பன்னீர் செல்வம், தற்காலிக முதல்வராக பொறுப்பு ஏற்று இருந்தார். கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட வி.கே.சசிகலா முதல்வராக பொறுப்பு ஏற்க அந்த கட்சியின் சட்டமன்றக் குழு முடிவு செய்தது. இதையடுத்து, முதல்வர் பன்னீர் செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

திடீர் குழப்பம்

இந்நிலையில், நேற்று முன்தினம் திடீரென போர்க்கொடி உயர்த்தினார். தன்னை பலவந்தப்படுத்தி ராஜினாமா கடிதத்தில் கையொப்பம் பெற்றனர் என்று குற்றச்சாட்டை முன் வைத்தார். இதனால், அ.தி.மு.க. கட்சியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டு, இரு அணிகளாக உடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலைக்கு தி.மு.க.வும், பாரதிய ஜனதா கட்சியும் காரணம் என்று குற்றம் சாட்டப்படுகிறது.

குழம்பிய குட்டை

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி கூறுகையில், “ பாரதிய ஜனதா கட்சி குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முயன்று கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் இப்போது குழப்பமான அரசியல் சூழல் நிலவுகிறது. இந்த நேரத்தில், ஓ.பன்னீர் செல்வம், அல்லது வி.கே.சசிகலா இதில் யாராவது ஒருவரை முதல்வராக உடனே பதவி ஏற்க வைக்க ஆளுநர் வித்யாசாகர் ராவ் கேட்டுக்கொள்ள வேண்டும்.

சட்டவிரோதமானது

ஆனால், ஆளுநர் வித்யாசாகர் ராவை இந்த நடவடிக்கையை செய்யவிடாமல் மத்திய அரசு தடுத்து வருகிறது. இது கண்டிப்பாக தவறானது, அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. தமிழகத்தின் குழப்பமான சூழலை பயன்படுத்தி பாரதிய ஜனதா கட்ச ஆதாயம் தேடுவது, சட்டவிரோதம். தமிழகத்துக்கு செல்லாதீர்கள் என்று ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு உத்தரவிடுவது என்பது மத்திய அரசுக்கு தொடர்பில்லாத செயல்.

தாமதம் செய்யக்கூடாது

ஒரு நிமிடம் கூட தாமதம் செய்யாமல், வி.கே.சசிகலா அல்லது ஓ.பன்னீர் செல்வத்தை தங்கள் பெரும்பான்மையை சட்டப்பேரவையில் நிரூபிக்கச் செய்ய வேண்டும். முதல்வர் பதவி ஏற்பை ஆளுநர் தாமதம் செய்வது, அரசியலமைப்புச் சட்டத்தில், பழக்கத்தில் இல்லாத முறையாகும்'' என்று தெரிவித்தார்.