புதுக்கோட்டையில் வாடிக்கையாளர் ஒருவர் தவற விட்டு சென்ற ஒன்னரை சவரன் தங்க நகையை சிறை துறையால் நடத்தப்படும் பெட்ரோல் பங்கில் பணியாற்றிவரும் ஆயுள் தண்டனை கைதி ஒருவர் பத்திரமாக எடுத்து உரியவரிடம் ஒப்படைத்த நிகழ்வு காண்போருக்கு வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.அந்த கைதியின் நேர்மைக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி அருகே சிறைத்துறை நிர்வாகத்தால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பெட்ரோல் பங்கில் ஆயுள் தண்டனை கைதிகள் மட்டுமே பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். சிறைக் கைதிகளைக் கொண்டு செயல்படும் இந்த பெட்ரோல் பங்கில் நாள்தோறும் அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்பி செல்வது வழக்கம்.

இந்நிலையில் அடப்பன்வயலை சேர்ந்த சரவணன் என்ற வாடிக்கையாளர் தனது டூ வீலருக்கு பெட்ரோல் நிரப்பி விட்டு சென்ற போது அவர் கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை சவரன் தங்க நகை அங்கு தவறி விழுந்து விட்டது. இதுகுறித்து அறியாத அவர் அங்கிருந்து சென்று விட்ட நிலையில் பெட்ரோல் பங்கின் கீழே கிடந்த ரூ 65,000 மதிப்புள்ள அந்த தங்க செயினை அப்போது பணியில் இருந்த ஆயுள் தண்டனை கைதியான கிறிஸ்து ஆரோக்கியராஜ் என்பவர் எடுத்து சிறைத்துறை அதிகாரிகளிடம் பத்திரமாக கொடுத்துள்ளார்.
அவரின் இந்த செயலை அறிந்த சிறைத்துறை நிர்வாகம் அவரின் நேர்மையை பாராட்டியதோடு தங்கச் செயினை விட்டுச்சென்ற நபர் குறித்து தகவல்களை சேகரித்து வந்துள்ளனர்.இந்நிலையில் தனது தங்கச்செயினை தவறவிட்ட சரவணன் அங்கு வந்து தனது செயின் காணாமல் போனது குறித்து பெட்ரோல் பங்க் நடத்திவரும் சிறை துறையினரிடம் தெரிவித்துள்ளார்.