இன்று முதல் பொது போக்குவரத்து இயக்கப்படுவதாக தமிழக அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதன்படி நேற்று முதல் அனைத்து பேருந்துகளுக்கு  கிருமிநாசினி மருந்துகள் தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. அந்த வகையில் இன்று முதல் தமிழகம் முழுவதும் போக்குவரத்து காலை முதலே தொடங்கியது. குறிப்பாக பேருந்துகளில் பயணிக்கும் அனைவரும் கட்டாயம் முககவசங்கள் அணிய வேண்டும். மேலும் அவர்கள் பேருந்துகளில் ஏறுவதற்கு முன்பு அவர்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட வேண்டும். 

ஒரு பேருந்தில் 24 நபர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் புறநகர் பகுதியான தாம்பரம், பெருங்களத்தூர் நோக்கி வரும் பேருந்துகளில்  அரசு அறிவித்த விதிகளை காற்றில் பறக்கவிட்டு  பேருந்துகளில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்து வருகின்றனர். குறிப்பாக சில பேருந்துகளில் நிற்கும் அளவுக்கு கூட்டம் நெரிசல் காணப்பட்டது. இதனால் பெருங்களத்தூரில் பல மணி நேரமாக வேலைக்கு செல்ல முடியாமல் பயணிகள் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டு வருகிறது. 

அதாவது செங்கல்பட்டில் இருந்து சென்னை நோக்கி வரும் அனைத்து பேருந்துகளும் கூட்டம் நெரிசல் அதிகமாக காணப்படுவதால், பயணிகள் ஏறுவதற்கு அச்சம் காட்டுகின்றனர். இதனால் அருகில் இருக்கும் ஆட்டோ வாடகை கார்களை எடுத்துச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும் அரசு அறிவித்த விதியை மீறி பேருந்துகளில் சமூக இடைவெளி இல்லாமல்  பயணிகள் அதிக அளவுக்கு பயணிப்பதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் எச்சரிக்கின்றனர்.