ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணைய உயர்மட்டக்குழுவிடம் அதிமுக சார்பில் அக்காட்சியின் பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. எனவே தேர்தல் நடத்துவது தொடர்பாக மத்திய தேர்தல் ஆணையத்தின் உயர்மட்டக் குழுவினர் தமிழக அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் நேற்று ஆலோசனை மேற்கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக சார்பில் பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைப்புச் செயலாளர் மனோஜ் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

அக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு அவர்கள் பேட்டியளித்தனர், அப்போது  பொள்ளாச்சி ஜெயராமன் கூறியதாவது:  தமிழக சட்டமன்றத்திற்கு ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் அல்லது நான்காவது வாரத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட வேண்டும், மே மாதம் கோடை காலம் என்பதால் வாக்காளர்கள் வாக்களிக்க சிரமப்படுவார்கள், எனவே ஏப்ரல் மாதத்திலேயே தேர்தல் நடத்த வேண்டும். கொரோனா நோய் பரவல் இல்லாத வகையில் அந்தந்த கிராமங்களிலேயே வாக்குச்சாவடிகள் அமைக்க வேண்டும்.  ஓரிடத்தில் ஆயிரம் வாக்குகள் இருக்குமானால் அதை இரண்டாக பிரித்து வாக்குச்சாவடிகள் அமைக்க வேண்டும். 

குடிபெயர்ந்தவர்கள், இறந்தவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கவேண்டும். புதிய வாக்காளர்களை சேர்க்கும் நிலை இருக்கிறது என்பதால் அதற்கு மேலும் கால நீட்டிப்பு அளிக்க வேண்டும். ஏழை எளிய மக்கள் கொரோனா காலத்தில் அவதிக்குள்ளானார்கள், வேலை வாய்ப்பில்லாமல் சிரமப்பட்டார்கள் அவர்களுக்கு உதவும் மனதோடு முதலமைச்சர் 2,500 வழங்கியிருக்கிறார். இந்த பணம் தேர்தலுக்காக வழங்கப்படவில்லை, செல்வி.ஜெயலலிதா முதல்வராக இருந்த போது 100 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்பட்டது. அதை தற்போது முதலமைச்சர் ஆயிரம் ரூபாயாக வழங்கினார்,  தற்போது பொங்கல் பரிசு 2,500 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. காலத்திற்கு ஏற்ப, சூழ்நிலைக்கு ஏற்ப பொங்கல்பரிசு உயர்ந்திருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.