complaint against O Panneerselvam and Edappadi K Palaniswami

இந்த ஆட்சியை ‘அம்மாவின் ஆட்சி’ என்று சொல்லித்தான் வண்டியை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள் அமைச்சர்கள். ‘மாண்புமிகு இதயதெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலோடு இயங்கும் இந்த அரசு’ என்று மேடைக்கு மேடை பேசி ஜெயலலிதாவே ஆள்வது போல் ஒரு பிம்பத்தை பிசிறில்லாமல் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஆனால் அதேவேளையில் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது ஒரு முதல்வராக கொண்டு வந்த முத்தான திட்டங்கள் பலவற்றை கண்டும் காணாமல் விட்டு, அவற்றை குற்றுயிராக கதறிவிட்டு, கடைசியில் செயல்பாடற்ற திட்டமாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று அ.தி.மு.க. நிர்வாகிகளே ஆதங்கத்தில் வெடிக்கும் நிலை உருவாகியிருக்கிறது. 

இது பற்றி பேசும் அ.தி.மு.க.வினர் “ஏழை பெண்களோட நலன்ல அம்மாவுக்கு எப்பவுமே தனி அக்கறை இருந்துச்சு. அதனாலதான் கர்ப்பிணி பெண்களுக்கு அரசு செலவில் வளைகாப்பு திட்டத்தை கொண்டு வந்தார். பாலூட்டும் தாய்மார்களுக்காக தமிழகத்தின் பேருந்து நிலையங்கள்ள அருமையான வசதிகளோடு அறைகட்டிக் கொடுத்ததும் அம்மாதான். இதன் மூலமா பொது வெளியில வெச்சு பாலூட்டவும் முடியாம, அழும் குழந்தையை தேற்றவும் முடியாம சங்கடப்பட்ட பல லட்சம் பெண்களின் மானத்தை காப்பாற்றிய தெய்வம் அவர்.

ஆனால் அம்மா இறந்த பிறகு அந்த திட்டம் அலங்கோலமா கிடக்குது. பல ஊர்களில் ‘பாலூட்டும் தாய்மார்கள் அறை’ பூட்டப்பட்டும், மின்விசிறி இல்லாமல், கரண்டே இல்லாமல், பாதுகாப்பில்லாமல் கிடக்குது. 

இந்த நிலையில அம்மா அறிமுகப்படுத்திய ‘பேபி கேர் திட்டம்’ அப்படிங்கிற அருமையான திட்டமும், கழுத்தறுபட்ட கோழி மாதிரி துடிச்சுட்டு கிடக்குது. அம்மா இருந்தப்ப இந்த திட்டத்தின் படி அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆயிரம் ரூபாய் மதிப்புடைய 16 வகை பொருட்கள் (பேபி சோப், பேபி ஷாம்பு, பேபி பெட், பேபி டிரெஸ், நெயில் கட்டர் உள்ளிட்டவை) அடங்கிய பேக்கை இலவசமாக தந்தாங்க அம்மா. குழந்தை பெற்ற தாய், மருத்துவமனையில இருந்து டிஸ்சார்ஜ் ஆகி கிளம்புறப்ப இந்த பேக் அவங்களுக்கு வழங்கப்படும்.

’அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம்’ அப்படிங்கிற இந்த திட்டத்தின் மூலமா ஏழை பச்சிளங்குழந்தைகளும் சுகாதாரமான வாழ்க்கையை பெற ஆரம்பிச்சாங்க. இந்த திட்டத்தை தந்த அம்மாவை ஏழை தாய்மார்கள் வாழ்த்துனாங்க. 

ஆனா இன்னைக்கு இந்த திட்டம் சரி வர செயல்படலைன்னு பரவலான குற்றச்சாட்டு கிளம்பியிருக்குது. பல மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகளில் இது தரப்படுறதில்லையாம். அம்மா கொண்டு வந்த அருமையான திட்டத்தை முன்னாடியெல்லாம் அடுத்து வர்ற தி.மு.க. ஆட்சிதான் முடக்கும். ஆனா இப்போ அம்மா பெயரில் நடத்தப்படுற ஆட்சியே முடக்குதே! இந்த திட்டத்தின் பலன் கிடைக்காம மக்கள் நொந்து கிடக்குறாங்க. ஆனா எங்க அமைச்சர்களோ இதை சரி பண்ணுற கவலையெல்லாம் இல்லாம மாவட்டத்துக்கு மாவட்டம் அரசு செலவுல ஆடம்பரமா எம்.ஜி.ஆர். விழா நடத்திட்டு இருக்கிறாங்க. 

அதுக்கு ஆகுற செலவை இப்படி நல்ல திட்டங்களை தொடர அள்ளிக் கொடுத்தாலாச்சும் அம்மாவின் ஆன்மா அவங்களை மன்னிக்கும்.” என்று புலம்பிக் கொட்டினர். 

ஏன் டிஸ்சார்ஜ் ஆகும் தாய்மார்களிடம் பேபி கேர் கிட் தரப்படுவதில்லை? என்று அரசு டாக்டர்களிடம் கேட்டால் ‘குறைந்தளவுதான் அரசாங்கத்திடமிருந்து கிட் வந்துச்சு. தீந்து போன பிறகு பல முறை நினைவூட்டல் செய்தும் அது தரப்படலை. நாங்க என்ன பண்ணட்டும்?’ என்கிறார்களாம். 

ரெட்டை குழல் துப்பாக்கி போல் செயல்படும் பழனிசாமி, பன்னீர் இருவரின் கண்களில் இந்த பிரச்னை விழுமா?