வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தேமுதிக போட்டியிட தயார் என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். 

தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளில் அதிமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலை முன்னிட்டு தனித்து போட்டியிடுவது, கூட்டணி அமைப்பது, பிரச்சார பணிகளுக்கு தயாராவது உள்ளிட்ட உயர்மட்ட வியூகங்களை வகுப்பதில் கட்சிகள் முனைப்புடன் உள்ளன.

இந்நிலையில், தமிழகத்தில் ஆளும் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தேனியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தற்போது வரை நாங்கள் அதிமுக கூட்டணியிலேயே தொடர்கிறோம். இது ஜனநாயக நாடு ரஜினி மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். இதில் ஏற்படும் சோதனைகள் வேதனைகளைக் கடந்து சாதனை படைப்பது மிகவும் சிரமம். முதலில் அவர் கட்சி ஆரம்பித்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளட்டும் அதன்பின்னர் பேசுகிறேன் என்றார்.

மேலும், வரும் ஜனவரி மாதம் விஜயகாந்த் தலைமையில் பொதுக்குழு மற்றும் செயற்குழு நடைபெறும். அதில் எடுக்கும் முடிவுகளின்படி கூட்டணி அமையும். தேர்தல் பிரச்சார நிறைவு நாட்களில் விஜயகாந்த் பிரச்சாரம் செய்வார். வரும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கு தயார் நிலையில் உள்ளது எனவும்  பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.