Compete with DMK Not the AIADMK Nanjil Sampath
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எங்களுக்கு திமுகதான் போட்டி என்றும் அதிமுக பொருட்டே அல்ல என்றும் டிடிவி தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல்நாள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, ஒவ்வொரு கட்சியும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். ஆர்.கே.நகரில் போட்டியிடும் திமுக வேட்பாளராக மருது கணேசும், அதிமுக சார்பில் மதுசூதனனும், அதிமுக அம்மா அணி சார்பில் டிடிவி தினகரனும் போட்டியிட உள்ளனர். பாமக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடவில்லை என்று ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்த நிலையில், ஆர்.கே.நகரில் போட்டியிடும் வேட்பாளரை அறிவித்த பின்னர் எடப்பாடி-பன்னீர் தரப்பினர் அதிமுகவுக்கு போட்டி திமுகதான் என்று கூறியுள்ளது.
அதிமுக அம்மா அணி சார்பில் ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு முன்னதாக டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, எங்களுக்கு போட்டி திமுகதான் என்று கூறியது. இந்த நிலையில், டிடிவி தினகரன் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத், இணையதள பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஆர்.கே.நகர் மக்களின் அன்பையும், ஆதரவையும் பெற்றவர் டிடிவி தினகரன் என்றார். தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே இடைத்தேர்தலுக்கு தேர்தல் அறிக்கை தயாரித்தது கிடையாது. ஆனால், ஆர்.கே.நகர் தொகுதிக்கென்று தனியான தேர்தல் அறிக்கையை தயாரித்து அதை வைத்து தான் மக்களிடம் வாக்குகளை சேகரித்தோம்.
ஆர்.கே.நகர் தொகுதி மக்களின் சுக துக்கங்களை தீர்மானிக்கிற தேர்தல் அறிக்கையை தந்த ஒரே வேட்பாளர் டிடிவி தினகரன்தான் என்றார். அவருக்கு இனி அறிமுகம் தேவையில்லை. அவர் மீண்டும் களத்தில் இருக்கிறார். வஞ்சிக்கப்பட்டவர்களின், நிராகரிக்கப்பட்டவர்களின் சார்பாக தினகரன் தேர்தல் களத்தில் நிற்கிறார்.

ஆதிக்க வல்லூறுகளால் தொடர்ந்து தாக்கப்படும் நிலையில், ஏகாதிபத்தியத்தை அடக்குவதற்காக தேர்தல் களத்தில் நிற்கிறார். எத்தனையோ, வழக்குகளை சந்தித்துவிட்டு தான் அவர் வருகிறார். எனவே தினகரனை காப்பாற்றுவதன் மூலம் தாங்கள் காப்பாற்றப்படுவோம் என்று முடிவிற்கு ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் வந்து விட்டனர். எனவே தினகரன் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று கூறினார்.
தினகரனுக்கும் திமுகவுக்கும்தான் நேரடி போட்டி, அதிமுக எங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. இரட்டை இலை சின்னத்தை மீட்க டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். நிச்சயம் சின்னம் எங்களுக்கு கிடைக்கும் என்றார்.
பதவி ஆசையில் சில எம்.பி.க்கள் எதிரணிக்கு சென்றுள்ளனர். அவர்களை எண்ணி நாங்கள் கவலைப்படவில்லை. அந்த அணியில் இருந்தும் எந்த எம்.எல்.ஏ.க்களும் வரமாட்டார்கள். நாங்கள் அவர்களை எதிர்பார்க்கவும் இல்லை என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
