கொரோனா பாதிப்பு சமூகப் பரவல் நிலையை அடைந்து விட்டது என கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது.  உயிரிழப்பு எண்ணிக்கை 16,000 நெருங்கி உள்ளது. கோவாவில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது. அங்கு இதுவரை 1,039 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. 2 பேர் பலியாகி உள்ளனர். 370 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.

இந்நிலையில், கோவாவில் கொரோனா சமூக பரவலாக மாறியுள்ளது என கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- கோவாவில் கொரோனா தொற்று பல்வேறு பகுதிகளிலிருந்தும் கண்டறியப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதாக பரவுவது தெரிகிறது. ஆகையால்,  சமூக பரவல் ஏற்பட்டு விட்டது என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போலீசார் திறமையாக பணியாற்றி வருகின்றனர். மக்கள் தான் அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை. மாஸ்க் அணிவதும், சமூக விலகலை கடைபிடிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றார். 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருவதால் சமூக பரவல் ஏற்பட்டு விட்டதோ என்ற ஐயம் அனைவரும் மத்தியிலும் எழுந்தது. ஆனால், இதை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிங் மற்றும் மத்திய அரசு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், கோவாவில் சமூகப் பரவல் ஏற்பட்டு விட்டது என முதல்வரே தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.