pattina pravesam news : தர்மபுர ஆதினம் பட்டின பிரவேசம் நிகழ்ச்சிக்கு விதித்திருந்த தடையை  திரும்ப பெற்றதால், தமிழக அரசு தனது கொள்கையில் தடுமாற்றம் கண்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது.

பட்டின பிரவேச நிகழ்விற்கு தமிழக அரசு அனுமதி

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன திருமடத்தில் குரு பூஜையையொட்டி நடைபெற உள்ள பட்டனப் பிரவேச நிகழ்வில் தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தை பல்லக்கில் அமர்த்தி மனிதர்கள் சுமந்து செல்வார்கள், மனிதனை மனிதன் தூக்க அனுமதிக்கக் கூடாது என பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இதனையடுத்து மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் பட்டின பிரவேசம் நிகழ்விற்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதற்கு பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது. இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை , சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மயிலாடுதுறை தருமை ஆதீனம் தம்பிரான் சுவாமிகள், உள்ளிட்ட பல்வேறு ஆதினங்கள் சந்தித்து பேசினர். இதனையடுத்து தமிழக அரசு தர்மபுர ஆதினம் பட்டின பிரவேசம் நிகழ்விற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

தமிழக அரசு தனது கொள்கையில் தடுமாற்றம்

பட்டனம் பிரவேசம் நிகழ்விற்கு அனுமதி அளித்ததை பல்வேறு அமைப்பினர் வரவேற்ற நிலையில் திராவிடர் கழகம், கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்தநிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில், நாகரீக உலகில் மனிதனை மனிதன் சுமக்கும் பல்லக்குப் பயண பட்டினப் பிரவேச நிகழ்வை தர்மபுரம் ஆதினம் பிடிவாதமாக நடத்துகிறது. பகுத்தறிவு சிந்தனையோடு மதச்சார்பற்ற பண்புகளை அடிப்படையாகக் கொண்ட சட்டத்தின் ஆட்சியை சமூக நீதி பாதையில் நடத்தப்படும் அரசு பட்டினப் பிரவேசம் நிகழ்வுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதை நாகரீக சமுகத்தின் அனைத்துப் பகுதியினரும் வரவேற்றனர். இந்நிலையில், மடாதிபதிகளும், ஆதீனங்களும் முதலமைச்சரை நேரில் சந்தித்து பேசிய பிறகு, அரசு, பட்டினப் பிரவேச நிகழ்வுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்கிக் கொண்டது. இது அரசு கடைப்பிடித்து வரும் கொள்கையில் ஏற்பட்டிருக்கும் ஒரு பின்னடைவாகும். ஆதினங்களும், மடங்களும் தங்கள் வழக்காறுகளை சீர்திருத்தி வந்திருக்கும் வரலாற்றை மறந்து, மனிதர்களை கொண்டு பல்லக்கு தூக்கும் பட்டின பிரவேசத்தை நடத்துவதில் காட்டும் பிடிவாதம் வகுப்புவாத, மதவெறி சக்திகளின் அழுத்தங்களை வெளிப்படுத்துகிறது. இது போன்ற நேர்வுகளில் அரசு கொள்கையில் தடுமாறாமல், உறுதி காட்ட வேண்டும் என்று மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

நிதி அமைச்சர் கருத்து அதிர்ச்சி அளிக்கிறது

மேலும் அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் பணியாளர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக திமுக தலைமையில் ஆட்சி அமைந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டது. புதிய ஆட்சியில் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த அனைவருக்கும் நிதியமைச்சரின் விளக்கம் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நிதியமைச்சரின் விளக்கம் எந்த வகையிலும் ஏற்றத்தக்கதல்ல, சரியுமல்ல. இதன்மீது மாண்புமிகு முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு தேர்தல் அறிக்கையில் அளித்த உறுதிமொழிப்படி அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துமாறு மாநில நிர்வாகக்குழு கூட்டம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.