தற்போதைய திருச்செந்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிட்டால் அவரை தோற்கடிப்போம் என தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் சுபாஷ் பண்ணையார் தெரிவித்துள்ளார்.

 

திருச்செந்தூர் என்றால் அது  திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணனின் கோட்டை என்று சொல்லும் அளவிற்கு, அந்த தொகுதி முழுவதையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் அவர். நாடார் வாக்குகள் அதிகம் என்பதால் சாதி சொல்வாக்கில்  அங்கு அவரை அடித்துக்கொள்ள ஆள் இல்லை. அவர் மீது ஆயிரம் விமர்சனங்களைவைத்தாலும்  தேர்தல் என்று வந்துவிட்டால் அவரின் சாதிக்காரர்கள் அனிதாவை  விட்டுகொடுப்பதில்லை, ஆனால் தற்போது அந்த நிலை தலைகீழாக மாறியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் அம்மன்புரத்தில் தமிழ்நாடு நாடார் பேரவை நிறுவன தலைவர் வெங்கடேஷ் பண்ணையார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

 இதில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் சுபாஷ் பண்ணையார், திருச்செந்தூர் தொகுதி எம்எல்ஏ, அனிதாராதாகிருஷ்ணன் வரும் சட்டமன்ற தேர்தலில் தோற்கடிக்கப்படுவார் . அவருடைய செயல்பாடுகள் சரியில்லை. தொகுதி மக்களுக்கு எவ்வித நன்மையும் செய்யவில்லை . அனிதா.ராதாகிருஷ்ணனால் கலவரங்கள் தான் வந்துள்ளது. குறிப்பாக விடுதலை சிறுத்தைகளுக்கும், நாடார்களுக்கும் இடையே இப்பகுதியில் பிரிவினை ஏற்படுத்தியதே அவர் தான். வரும் இடைதேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவளிப்பது என்பதை இதுவரையிலும் முடிவுசெய்யவில்லை. 

பனங்காட்டு மக்கள் கழகத்திற்கும், பனங்காட்டு படை கட்சிக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு யாரும் இதுவரை எங்களை தொடர்பு கொள்ளவில்லை. அப்படி கேட்கும் பட்சத்தில் இது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றார்.