commissioner pressmeet about thirumurugan gandhi arrest
மே 17 இயக்கம் திருமுருகன் காந்தி விதிமுறைகளை மீறி நடத்தியதால் எடுக்கப்பட்ட நடவடிக்கை சரியே எனவும், வெறும் மெழுகுவர்த்தி மட்டும் ஏற்றியது போல சித்தரிப்பது தவறு எனவும், மாநகர கமிஷ்னர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.
கடந்த மாதம் 21-ம் தேதி மெரினா கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
காவல்துறையின் தடையை மீறி இந்த நிகழ்வை நடத்தியததாகக் கூறி மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகியோரைக் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனிடையே கடந்த 29-ம் தேதி இந்த நான்கு பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் திடீரென கைது செய்யப்பட்டனர்.
இந்த கைது நடவடிக்கையைக் கண்டிக்கும்விதமாக, 'நினைவேந்தல் நடத்திய இவர்களை எப்படி குண்டர் சட்டத்தில் கைது செய்யலாம்?' என்று பொதுமக்கள் தமிழக அரசு மற்றும் போலீசாருக்கு எதிராக குரல்கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், மே 17 இயக்கம் திருமுருகன் காந்தி மீது குண்டர் சட்டம் போட்டது குறித்து காவல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு கோரி கல்லூரி மாணவர்கள் மெரினாவில் போராட்டம் நடத்தினர். இதைதொடர்ந்து, பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து மெரினாவில் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சிக்கின்றனர்.
இதையொட்டி, சென்னை நகரில், போராட்டம் நடத்துவதற்கு அனைவரும் மெரினாவை பயன்படுத்துகின்றனர். இந்த பகுதி பொழுதுப்போக்குக்கான இடம். வெளிநாடு, வெளிமாநில சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

அமைதியான வழியில் போராட்டம் நடத்துவதாக இருந்தால், அதற்காக தனி இடம் ஒதுக்கி தரப்படும். பொதுமக்களுக்கோ, சுற்றுலா பயணிகளுக்கோ யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாதபடி செய்து தரப்படும்.
கடந்த வாரம், மெரினாவில் முள்ளிவாய்க்கால் நினைவு நாளையொட்டி, வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது மட்டுமே குண்டர் காவல் தடுப்பு சட்டத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி,விதிமுறைகளை மீறினார். இதற்காக அவரை கைது செய்தது சரியானதுதான். ஆனால், மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தியதுபோல் பிம்பம் ஏற்படுத்துவது தவறானது.
இவ்வாறு அவர் கூறினார்.
