Comments Against Tamilnadu BJP Leaders
’பேசுவதை விட செயல்படுங்கள்’ என்று சமீபத்தில் தனது தமிழக விசிட் தள்ளிப்போனபோதும் கூட பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு அட்வைஸ் மெசேஜ் கொடுத்திருந்தார் அமித்ஷா. ஆனால் ஹெச்.ராஜாவும் தமிழிசையும் தங்களை இதற்கு விதிவிலக்கு என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் போலும்...
மாட்டிறைச்சிக்கு தடை விவகாரம் தேசம் முழுக்க பற்றி எரிகிறது. அதிலும் பா.ஜ.க. காலூன்றிட துடிக்கும் தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை மோடிக்கு எதிரான மக்கள் இயக்கமாக மாற்றிட துடிக்கிறார்கள். ஸ்டாலின், சீமான், திருமா, குஷ்பூ என்று ஆளாளுக்கு இதை கையிலெடுத்து துல்லிய அரசியல் செய்கிறார்கள்.
ஆனால் ஹெச்.ராஜா இதற்கு தரும் எதிர்தாக்குதல்கள் பா.ஜ.க.வை சேதப்படுத்துவதாகவே அமைகின்றன என்று சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

எப்படியாம்? ‘’ஹெச்.ராஜா என்றுமே வாய்த்துடுக்கான நபர்தான். எமோஷனலான திராவிட அரசியல் ஆளுமை காட்டும் தமிழகத்தில் இப்படியும் ஒரு தளகர்த்தர் இருப்பது தமிழக பா.ஜ.க.வுக்கு நல்லதே.
ஆனால் எடுத்ததுக்கெல்லாம் எரிந்து விழுந்து, எகத்தாளமாக பேசி, தேச துரோகி என்பது போன்ற அதிர்ச்சி தரும் விமர்சனங்களை ஏவி...என்று அட்ராசிட்டி செய்கிறார்.
அதிலும் மாட்டுக்கறி விவகாரத்தில் அவரது வாயின் நீளம் தடுப்புகளைத் தாண்டி தாவிக்குதிக்கிறது. ‘பாஜகவுடன் மோதுவது பாறையோடு மோதுவதற்கு சமம்!’ என்று பத்தாம்பசலியாக பஞ்ச் டயலாக் பேசுகிறார். இது மிக மோசமான வார்த்தைக் கையாளுகை. தங்களின் உணவின் மீது ரெட்கார்டு போட்டிருக்கும் மத்திய அரசின் மீது மாளாத எரிச்சலில் இருக்கும் பெரும்பகுதி மக்களை இது எரிச்சலூட்டுகிறது.
அரசியல் பிரச்னை போல் அதிரடியாக மறுத்துப் பேசிட வேண்டிய பிரச்னை இதுவல்ல, இது மக்களின் உணர்வு சம்பந்தப்பட்ட விஷயம் எனவே மென்மையாகவும், அழுத்தமாகவும்தா கையாள வேண்டும் என்பதை ஹெச்.ராஜா புரியாதது அவரது அவசரபுத்தியை காட்டுகிறது. ஆனால் இவரோ திருமாவும் சீமானும் கலவரப்புத்தியுடன் செயல்படுகிறார்கள் என்கிறார்.
தமிழக அரசுக்கு பெரும் சேதாரத்தை ராஜாவின் ரவுசு பேச்சு உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பதில் இரண்டாம் கருத்தில்லை. எந்த தைரியத்தில், இறுமாப்பில் இவர் இப்படி பேசுகிறார் என்பதை அமித்ஷா கண்டறியவேண்டும்.
இவருக்கு அடுத்த நிலையில் தமிழிசையும், பொன்ராதாகிருஷ்ணனும் வரிந்து கட்டிக் கொண்டு வருகிறார்கள்.

கருணாநிதியின் பிறந்தநாள் விழா என்பது அக்கட்சி சம்பந்தப்பட்ட விஷயம். அதை வைத்து அவர்கள் அரசியல் செய்தால் செய்துவிட்டு போகட்டும். ஆனால் தினம் தினம் அதை சொல்லி தி.மு.க.வை நோண்டி புண்ணாக்குவது பா.ஜ.க.வுக்குதான் வலியை தரும். பொன்ராதாகிருஷ்ணனோ ‘இது வைரவிழாவே அல்ல இது ஒரு அரசியல் விழா’ என்கிறார். தமிழிசையோ ‘வைரவிழா எந்த தாக்கத்தையும், திருப்புமுனையையும் ஏற்படுத்தாது.’ என்கிறார்.

ஏன் இந்த தொடர் தாக்குதல்கள். தி.மு.க.வை பா.ஜ.க. விமர்சிக்க கூடாது என்று யாரும் சொல்லவில்லை. ஆனால் தினம் தினம் இந்த கதையை பேசும் பா.ஜ.க. ஒன்றை மறந்துவிட்டது வசதியாக. இவர்கள் மோசமாக விமர்சிக்கும் இதே வைரவிழா நிகழ்வுக்கு தங்களை அழைக்கவில்லை என்று என்னா குதி குதித்தார்கள்? ஒரு வேளை இவர்களும் அழைக்கப்பட்டிருந்தால் இந்த விழா அரசியல் விழாவாக இல்லாமல் வைரவிழாவாக மட்டுமே தெரிந்திருக்குமா பொன்னாருக்கு?
பேச்சால் வளர்ந்த திராவிட இயக்கங்களே கால ஓட்டத்திற்கு ஏற்ப வார்த்தைகளை குறைத்துக் கொண்டு செயல் வீச்சில் இறங்கிவிட்டன.
ஆனால் டிஜிட்டல் திரையில் தோண்றி உரயாற்றும் ஹைடெக் தலைவரை வைத்துள்ள தமிழக பா.ஜ.க. இப்படி ஆலமரத்தடி பஞ்சாயத்து பெருசுகள் போல் பேசிப்பேசியே கொலையாய் கொல்வது கேடான அரசியல்.

பொன்னாரும், தமிழிசையும் மணிக்கொரு முறை போகுமிடமெல்லாம் மீடியாவிடம் எதையாவது ஒப்புவித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. இந்தியா தாண்டி சர்வதேசத்தையும் திரும்பிப் பார்க்க வைத்த ஜெயலலிதா மீடியாக்களை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை சந்திப்பார் என்று நினைவிருக்கிறதா? ஆட்சியில் இருந்தால் மட்டுமில்லை இல்லாவிட்டாலும் ஜெ.,வின் பேச்சு குறைவுதான்.
ஆனால் ஒரு முறை பேசினால் அது ஒரு வருடத்துக்கு எதிரொலிக்கும். அவர்தான் அசல் கத்தி! தயவுசெய்து அட்டைக்கத்தி என்று பெயர் வாங்கிவிடாதீர்கள்.” என்கிறார்கள் விளக்கமாக. புரிய வேண்டியவங்களுக்கு புரிஞ்சா சரி!
