அடுத்த மாதம் தமிழக சட்டமன்ற கூட்டம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இதையொட்டி அமைச்சர்கள், தங்களது துறைகளின் மானிய கோரிக்கைகள் குறித்த விவாதத்துக்கு தீவிரமாக குறிப்புகள் தயார் செய்து வருகின்றனர்.

இந்தாண்டு தமிழக சட்டமன்ற பட்ஜெட், கடந்த பிப்ரவரி 8ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விவாதம் 14ம் தேதி வரை நடந்தது. அப்போது, மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்த தேதி அறிவிக்கப்பட்டதால், துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நிறுத்தப்பட்டது. இதற்கிடையில், ராஜ்யசபா தேர்தலும் விரைவில் நடக்க இருக்கிறது.

இதையடுத்து, சட்டமன்ற கூட்டம், அடுத்த மாதம் நடத்த அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதைதொடர்ந்து, அனைத்து அமைச்சர்களும், தங்களது துறை வாரியாக, கொள்கை விளக்க குறிப்பு தயார் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், அதற்கான ஆய்வுக் கூட்டத்தையும், அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில்,  வருவாய் துறை, உயர் கல்வித் துறை சார்பில் நேற்று அமைச்சர்கள் தலைமையில், ஆதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டங்கள் நடந்தன. இதில், வருவாய் துறை அமைச்சர், உதயகுமார், உயர்கல்வித்துறை அமைச்சர், அன்பழகன் ஆகியோர், தலைமை வகித்தனர். கூட்டத்தின்போது, கொள்கை விளக்க குறிப்பில் இடம் பெற வேண்டியவை, துறை ரீதியாக புதிய அறிவிப்புகள் குறித்து, ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.