தேமுதிக குறித்து கேள்வி எழுப்பி உங்களது தரத்தை குறைத்து கொள்ள வேண்டாம் என செய்தியாளர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுகவுக்கு ஆதரவு அளிக்கும் அமைப்புகளுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு, செய்தியாளர்களை சந்தித்த அவர், ’’திமுகவுக்கு மேலும் பல அமைப்புகள் ஆதரவு அளித்துள்ளன. திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த பல்வேறு கட்சிகளுக்கும் நன்றி. தொகுதி ஒதுக்கீடு குறித்து காங்கிரசுடன் நாளை பேச்சுவார்த்தை நடைபெறும். காங்கிரஸ் கட்சி குழு அமைத்தவுடன் திமுக குழு பேச்சுவார்த்தை நடத்தும். மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் 2 அல்லது 3 நாளில் அறிவிக்கப்படும்.

40 தொகுதிகளில் ஒன்றில் கூட ஊழல் பெருச்சாளிகள் நுழைய இடம் தராத வகையில் வாக்களிக்க வேண்டும். தேமுதிக விவகாரம் பற்றி துரைமுருகன் விளக்கம் தந்துவிட்டதால் நான் பேச விரும்பவில்லை. இந்த விவகாரம் குறித்து மிக விளக்கமாக, துள்ளியமாக எல்லாவற்றையும் சொல்லி இருக்கிறார். எனவே அதைப்பற்றி பேசி எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. அதைப்பற்றி நீங்களும் பேசி உங்களது தரத்தை குறைத்துக் கொள்ளாதீர்கள்’’ என அவர் தெரிவித்தார்.

அப்போது துரைமுருகன் வீட்டை தேமுதிகவினர் முற்றுகையிட்டது குறித்தும், அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஸ்டாலின், ஒருவேளை மீண்டும் தேமுதிகவினர் திமுக கூட்டணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் எனக்கோரி துரைமுருகன் வீட்டிற்கு மீண்டும் வந்து விடலாம் என்பதை தடுப்பதற்காக அதிமுக அரசு போலீஸ் பாதுகாப்பு போட்டிருக்கலாம்’ என ஸ்டாலின் கிண்டலாக பதிலளித்தார்.