தலைமை ஏற்க வா, அஞ்சா தலைவனே என மு.க.அழகிரிக்காக கோவை முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மு.க.அழகிரி கருணாநிதி காலத்தில் கட்சியை விட்டு ஒதுக்கப்பட்டார். தந்தையின் மறைவுக்கு பிறகு எப்படியாவது திமுகவில் இணைந்து விடலாம் என பலவகையில் முயற்சி செய்து வந்தார். ஆனால் மு.க.ஸ்டாலின் மனமிறங்கவில்லை. முரசொலி அறக்கட்டளையில் தனது மகனுக்கு பொறுப்புக் கொடுத்தால் போதும் என கேட்டுப்பார்த்தும் அழகிரியின் கோரிக்கையை சட்டை செய்யவில்லை ஸ்டாலின். இதனால் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் மு.க.அழகிரி சமீபகாலமாக திமுகவுக்கு எதிராக கொஞ்சம் குரலை எழுப்பத் தொடங்கியுள்ளார்.

திமுக அதிருப்தியாளர்களுடன் தொடர்பில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கோவை மாநரில் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் திமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ‘’அஞ்சா நெஞ்சனே நேரம் நெருங்கிவிட்டது. உண்மை தொண்டன் வெற்றியை உறுதி செய்ய வாரீர். கழக ஆட்சி என்றும் கலைஞர் ஆட்சி அமையட்டும்’’ என ஒரு வகை போஸ்டரும், மற்றொன்றில், ’’உண்மை தொண்டர்களின் உணர்வுகளை உயிரூட்ட தலைமை ஏற்க வா, அஞ்சா தலைவனே’’எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மாவட்டங்களில் குறிப்பாக மதுரை பகுதிகளில் அழகிரிக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்படுவது வழக்கம். அதனை பெரிதாக்வும் எடுத்துக் கொள்ள முடியாது. ஆனால், மேற்கு மாவட்டமான கோவை மாநகரில் ஒட்டப்பட்டுள்ளது திமுகவினடுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. யார் இந்த போஸ்டர்களை ஒட்டியது என திமுகவினர் விசாரித்து வருகின்றனர்.