கத்தி கத்தி படிக்க வேண்டிய மாணவர்கள் கத்தியுடன் படிக்கின்றனர். பட்டம் பெற படிக்க வேண்டியவர்கள் பட்டாக்கத்தியுடன் படிக்க வருகிறார் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை வேதனை தெரிவித்துள்ளார். 

சென்னை திருவொற்றியூரில் பாஜக உறுப்பினர் சேர்க்கையை மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் துவக்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்து பாஜக சார்பில் எடியூரப்பா வெற்றி பெற்ற நிலையில் தமிழக பாஜக சார்பில் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். புதிய கல்வி கொள்கை குறித்து திமுகவினர் பேசி வருவது மக்கள் நலனுக்காக அல்ல. பாஜகவின் மீதுள்ள பயத்தாலேயே அதனை பேசி வருகின்றனர். வேலூரில் அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.  

கல்லூரி மாணவர்கள் விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தமிழிசை கத்தி கத்தி படிக்க வேண்டிய மாணவர்கள் கத்தியுடன் படிக்கின்றனர். பட்டம் பெற படிக்க வேண்டியவர்கள் பட்டாக்கத்தியுடன் படிக்க வருகிறார் என்றார். 

மாணவர்களை நல்வழிப்படுத்த ஆசிரியர்கள் தொடர்ந்து முயற்சி செய்யவேண்டும். சினிமாத்துறையில் இருப்பவர்களுக்கும் அதில் முக்கிய பங்கு இருக்கிறது என்றார். மாணவர்களின் வன்முறை கலாச்சாரத்திற்கு திரைத்துறையினரே காரணம் என தமிழிசை குற்றம்சாட்டியுள்ளார். திரைப்பட துறையில் அரசியல் தேடுகிறார்களே தவிர நல்ல கொள்கைகளை மேற்கொள்வதில்லை என தமிழிசை விமர்சனம் செய்துள்ளார்.