தேர்தல் ரேஸில் முந்தும் வேலுமணி.. பின்தங்கும் செந்தில் பாலாஜி.. கோவையை கைப்பற்றுவது யார்?
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு வருகிற பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற நடைபெற இருக்கிறது.
கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு பெற்று விளங்கும் அதிமுகவை தோற்கடிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டம் முழுவதையும் அதிமுக கூட்டணியே கைப்பற்றியது. மொத்தமுள்ள 10 தொகுதிகளில் அதிமுக 9, பாஜக 1 என கைப்பற்றியது. கோவை மாவட்டத்தை திமுகவின் கோட்டையாக மாற்ற வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜியும், கோவை எப்போதும் அதிமுகவின் கோட்டை தான் என்பதை நிரூபிக்க முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி வேலுமணியும் களத்தில் இறங்கியுள்ளதால் கோவை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி வேலுமணி திமுகவின் நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதிகளை கையில் எடுத்துள்ளார்.அவருக்கு நல்ல வித ரெஸ்பான்ஸையும் மக்களிடையே கொடுத்து இருக்கிறது. இதனால் செம உற்சாகத்தில் இருக்கிறார் எஸ்.பி வேலுமணி. கோவை மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி நேரடியாக களத்தில் இறங்கி நகர்ப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தை செயல்படுத்துவது, மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்துவது, அரசின் நலத்திட்டங்களை மக்களுக்கு நேரடியாக எடுத்து செல்லுவது என தீவிரமாக வேலை செய்து வருகிறார்.
முக்கியமாக பார்க்கும்போது, குடும்பத் தலைவியருக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை, மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும், நிறுவனத்துடன் போடப்பட்ட குடிநீர் வழங்கும் ஒப்பந்தம் ரத்துசெய்யப்பட்டு மாநகராட்சியே அந்தப் பணியை மேற்கொள்ளும் போன்ற வாக்குறுதிகளை இதுவரை திமுக நிறைவேற்றவில்லை என்பதால் இவற்றை எல்லாம் கையில் எடுத்து தேர்தலை சந்திக்க அதிமுக தயாராகி வருவதாக சொல்கின்றனர்.
உள்ளாட்சி தேர்தலை கருத்தில் கொண்டு கோயம்புத்தூர் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என அனைத்து இடங்களுக்கும் தனிதனி குழு அமைத்து மக்களின் அன்றாட பிரச்சனைகளை தீர்ப்பது, பென்ஷன், ரேஷன் அட்டை என அனைத்து பிரச்சனைகளையும் உடனடியாக தீர்க்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி எடுத்துள்ள இந்த அரசியல் வியூகம் ஒட்டுமொத்த கோவை திமுகவினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கோவையை பார்க்கும் போது, கடைசி நேர தேர்தல் முடிவு வரை பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்று தெரிகிறது.