தி.மு.க படு வீக்காக இருப்பதாக சொல்லப்படும் கொங்கு மண்டலத்திற்கு உட்பட்ட கோவையில் மாநாடு நடத்தி நாடாளுமன்ற தேர்தலுக்கான அரைகூவலை விடுக்க ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  கடந்த 2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தொடங்கி, 2009ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல், 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2016-ம் நாடாளுமன்ற தேர்தல் என சுமார் 5 தேர்தல்களில் தி.மு.க.விற்கு கொங்குமண்டலத்தில்  மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது. நிர்வாகிகளை மாற்றிப் பார்த்தும் கொங்கு மண்டலத்தில் மட்டும் தி.மு.க.வால் பெரிய அளவில் வெற்றியை பெற முடியவில்லை.  அதே சமயம் அ.தி.மு.க-வின் செல்வாக்கு கொங்கு மண்டலத்தில் தேர்தலுக்கு தேர்தல் அதிகரித்து வந்துள்ளது. ஏன் அண்மையில் கட்சி தொடங்கிய தினகரனுக்கு கூட கொங்கு மண்டலத்தில் மிகப்பெரிய கூட்டம் கூடியது. இப்படியாக தி.மு.க.விற்கு எப்போதுமே பாதகமாக இருக்கும் கொங்கு மண்டலத்தில் தனது செல்வாக்கை அதிகரிக்கவும், அங்குள்ள கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை உற்சாகப்படுத்தவும் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது லண்டன் சென்றுள்ள ஸ்டாலின் விரைவில் தமிழகம் திரும்ப உள்ளார். அவர் சென்னை திரும்பிய உடன் வழக்கமாக நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக தி.மு.க நடத்தும் மாநாட்டிற்கான அறிவிப்பு வர உள்ளது. கடந்த முறை திருச்சியில் தி.மு.க. மாநாடு நடத்தியது. அதே போன்ற ஒரு பிரமாண்ட மாநாட்டை தற்போது கோவையில் நடத்தலாம் என்று ஆரம்ப கட்ட பணிகள் கூட துவங்கிவிட்டன. தி.மு.க.விற்கு செல்வாக்கு குறைவு என்று கூறப்படும் கொங்குமண்டலத்தில் பிரமாண்ட கூட்டத்தை கூட்ட வேண்டும் என்பது தான் ஸ்டாலின் டார்கெட்.  யாரும் எதிர்பார்க்க முடியாத அளவிற்கு கூட்டத்தை கூட்டி கோவையில் இருந்தே தேர்தல் பணிகளை துவங்கவும் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இந்த மாநாட்டில் தி.மு.க.வின் கூட்டணி கட்சித்தலைவர்கள் அனைவரையும் பங்கு பெறச் செய்வது என்கிற முடிவிலும் ஸ்டாலின் உள்ளதாக சொல்லப்படுகிறது. வாய்ப்பு இருந்தால் தொகுதிப்பங்கீடுகளை எல்லாம் இறுதி செய்து வேட்பாளர் பட்டியலை கூட கோவை மாநாட்டில் வெளியிடலாம் என ஸ்டாலின் கணக்கு போடுவதாக சொல்லப்படுகிறது.