திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையே தொடங்காத நிலையில், கோவை நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநில பொறுப்பாளர் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார். 

தொகுதி பங்கீடு தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்த திமுகவில் குழு அமைக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் வேறு கட்சிகள் எதுவும் இன்னும் குழுவை அறிவிக்கவில்லை. இந்நிலையில் சில குறிப்பிட்ட  தொகுதிகளை மனதில் வைத்து கூட்டணி கட்சிகள் தேர்தலில் போட்டியிடும் ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றன. அந்தவகையில் காங்கிரஸ் கட்சியில் கோவையில் போட்டியிடும் ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறது.

கோவையில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் மாநில பொறுப்பாளர் சஞ்சய் தத் இதுதொடர்பாகப் பேசும்போது, “சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி மூன்று மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்தது. தற்போது நாடு மாற்றத்தை எதிர்நோக்கியுள்ளது. அதை காங்கிரஸ் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க பாடுபட வேண்டும். அதனை மனதில் வைத்து கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. இந்தத் தொகுதியில் காங்கிரஸ் நிச்சயம் வெற்றிப் பெறும். அதற்கு காங்கிரஸ் தொண்டர்கள் பாடுபட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இடதுசாரிகளும் கோவை தொகுதியைக் கேட்க வாய்ப்புண்டு. அவர்களுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சி அந்தத் தொகுதியில் போட்டியிடப் போகும் ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறது.