பாரதிய ஜனதா கட்சியுடனான கூட்டணியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மறுக்கவில்லை; அதே நேரத்தில் தேர்தலின்போது கூட்டணி குறித்து முடிவு செய்வோம் என்றும் முதலமைச்சர் பழனிச்சாமி கூறியுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று காலையில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இதன் பின்னர், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை, குமரியில் ஹெலிகாப்டர் இறங்குதளம், சென்னை வெள்ளத்தடுப்புக்கு நிதி உள்ளிட்டவை குறித்து பிரதமரிடம் பேசியதாக கூறினார்.

இதன் பின்னர், எடப்பாடியிடம் செய்தியாளர்கள், திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முதலமைச்சர், திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலை அறிவிக்க வேண்டியது தலைமை தேர்தல் ஆணையத்தின் வேலை என்றும், திருப்பரங்குன்றம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் கூறினார்.

தமிழகத்தின் அனுமதியில்லாமல், காவிரி நதியில் கர்நாடகம் அணை கட்ட முடியாது என்றும் கூறினார். வரும் சட்டமன்ற தேர்தலின்போது யார் யாருடன் கூட்டணி என்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், தேர்தலே இன்னும் அறிவிக்கப்படவில்லை. தேர்தல் வரும்போது யார் யாருடன் கூட்டணி சேர்கிறார்கள் என்பதைப் பொறுத்து நாங்களும் கூட்டணி அறிவிப்போம் என்றார். 

திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாக உள்ளதோடு, பாஜகவுடன் கூட்டணி சேர்வது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று திமுக கூறிய நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜகவுடன் மறைமுகமாக கூட்டணி அமைத்துள்ளதை மறுக்கவில்லை. அதே நேரம் தேர்தல் நேரத்தின்போது முடிவு செய்வோம் என்றும் முதலமைச்சர் கூறியிருக்கிறார்.