கூட்டணி கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட நிர்பந்திக்கவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

பிரபல ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த மு.க.ஸ்டாலின்;-  திமுக கூட்டணி என்பது எண்ணிக்கை அடிப்படையில் அமைந்த கூட்டணி அல்ல, ஒருமித்த எண்ணங்கள் அடிப்படையிலான கூட்டணி, கொள்கை சார்ந்த கூட்டணி என கூறியுள்ளார். கூட்டணி கட்சிகளை திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட நிர்பந்திக்கவில்லை. எங்களது கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்தும் நோக்கில் செய்த சதி இதுவாகும். மக்கள் மனதில் இடம்பெற்ற ஒரு சின்னத்தில் கூட்டணி கட்சிகள் போட்டியிட விரும்பினால் அதை வழங்குவது எங்கள் கடமை எனவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

பேரறிஞர் அண்ணா அவர்கள், தலைமையில் நடந்த தேர்தலின் போதே சில கூட்டணிக் கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டுள்ளது. மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற ஒரு சின்னத்தில் போட்டியிட தோழமைக் கட்சி முன்வரும் போது அதனை வழங்குவது எங்கள் கடமை. இது நட்பின் அடிப்படையிலானது. இதில் நாங்கள் நிர்ப்பந்திக்கிறோம் என்பது எல்லாம் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்த சிலர் செய்யும் சதிகள். அதற்கு ஊடகங்கள் பலியாக வேண்டாம் என கூறியுள்ளார்.