தேமுதிக எந்த கூட்டணியில் உள்ளதோ அந்தக் கூட்டணிதான் ஆட்சியமைக்கும் என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். 

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக முதற்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளன. அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில் அதிமுகவோடு கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளான தேமுதிக, பாமக போன்றவற்றின் முடிவு குறித்து இன்னும் தெரிய வரவில்லை.

இந்நிலையில், திருப்பூரில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- 2011ல் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தோம் இதுவரை அதிமுக ஆட்சியே தொடர்கிறது. மத்தியில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தோம் 2வது முறையாக பாஜக ஆட்சி தொடர்கிறது. கூட்டணி அமைத்தாலும் தனித்து போட்டியிட்டாலும் தேமுதிக இலைக்கை அடைந்தே தீரும். தேமுதிக தலைவர் விஜயகாந்த் 100 வயது வரை நலமுடன் இருப்பார். 

மேலும், முதல்வர் வேட்பாளரை தேசிய ஜனநாயக கூட்டணி அறிவிக்கும் என நாங்களும் காத்திருக்கிறோம். பொள்ளாச்சி விவகாரத்தில் குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். பொள்ளாச்சி விவகாரத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவோரை தடுப்பதை ஏற்க முடியாது என பிரேமலதா கூறியுள்ளார்.