மதுரை வந்த மோடி, தி.மு.கவை பற்றி ஒரு வரி கூட வாய் திறக்கவில்லை. அதாவது எதற்கும் இருக்கட்டும் தி.மு.கவுடன் கூட்டணிக்கான வாய்ப்பை ஏன் முறித்துக் கொள்ள வேண்டும், கூட்டணி கதவை திறந்தே வைத்திருப்போம் என்கிற நிலைப்பாடு தான் மோடியின் இந்த முடிவுக்கு காரணம் என்கிறார்கள்.
தமிழகத்தை பொறுத்தவரை தங்களது கூட்டணி கதவு திறந்தே இருக்கிறது என்பதை மீண்டும் உறுதிபடத் தெரிவித்துவிட்டு சென்றுள்ளார் பிரதமர் மோடி.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்ட வந்த பிரதமர் மோடி நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தையும் துவங்குவார் என்று கூறியிருந்தார் தமிழிசை. அதே போல் தமிழகத்திற்கு வந்த மோடி, மத்திய அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் தமிழக மக்கள் அடைந்துள்ள பலன்களை விரிவாக குறிப்பிட்டு பேசினார். இதே போல் எய்ம்ஸ் மருத்துவமனையின் சாதகங்களையும் புட்டு புட்டு வைத்தார் மோடி.
ஆனால் மதுரையில் மறந்தும் கூட மோடி அரசியல் பேசவில்லை. ஆனால் கடந்த முறை நமது அண்டை மாநிலமான கேராள சென்றிருந்த போது அங்கு ஆளும் இடதுசாரிக்கட்சியை ஒரு பிடி பிடித்தார் மோடி. அதே சமயம் தமிழகம் வந்த மோடி பா.ஜ.கவுடன் நெருக்கம் காட்டும் காரணத்தால் அ.தி.மு.கவை விமர்சிக்கவில்லை என்பதை கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் தொடர்ந்து மோடிக்கு எதிராக தீவிர அரசியல் செய்து வரும் தி.மு.க குறித்து கூட வாய் திறக்கவில்லை.
இதற்கு காரணம் தமிழகத்தில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகள் தான். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு கூட்டணி அரசு தான் மத்தியில் அமையும் என்பது கருத்துக்கணிப்புகள் மூலம் தெரியவந்திருக்கிறது. எனவே தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளையும் மோடி மிக முக்கியமானதாக கருதுகிறார். தேர்தலில் தனித்து போட்டியிட்டு தொகுதிகளை கணிசமாக வெல்வது என்பது தமிழகத்தில் தற்போதைக்கு சாத்தியம் இல்லை என்றும் கருத்து கணிப்புகள் கூறுகின்றன.
எனவே தமிழகத்தை பொறுத்தவரை வலுவான ஒரு கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று பா.ஜ.க விரும்புகிறது. தங்களது பழைய தோழமை கட்சிகள் கூட கூட்டணிக்கு வரலாம் என்று மோடி பத்து நாட்களுக்கு முன்னரே தி.மு.கவிற்கு மறைமுகமாக அழைப்பு விடுத்தார். ஆனால் ஸ்டாலின் அந்த அழைப்பை ஒரு அறிக்கை மூலம் உடனடியாக நிராகரித்துவிட்டார்.
இந்த நிலையில் தான் மதுரை வந்த மோடி, தி.மு.கவை பற்றி ஒரு வரி கூட வாய் திறக்கவில்லை. அதாவது எதற்கும் இருக்கட்டும் தி.மு.கவுடன் கூட்டணிக்கான வாய்ப்பை ஏன் முறித்துக் கொள்ள வேண்டும், கூட்டணி கதவை திறந்தே வைத்திருப்போம் என்கிற நிலைப்பாடு தான் மோடியின் இந்த முடிவுக்கு காரணம் என்கிறார்கள். இதே போல் பா.ஜ.க மேலிட பொறுப்பாளர் முரளிதர் ராவும் கூட தி.மு.கவிற்கு எதிராக வாய் திறக்காமல் இருக்கிறார். எனவே பா.ஜ.கவை பொறுத்தவரை தமிழகத்தில் தி.மு.க மற்றும் அ.தி.மு.கவை சம தொலைவில் வைத்திருப்பதாகவே தெரிகிறது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 28, 2019, 9:41 AM IST