மதத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் ஆன்மீகவாதிகள் அல்ல. அவர்கள் ஆன்மீகவியாதிகள்; ஆன்மீக போலிகள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் பொய்யும்‌ புரட்டும்‌ மலிவான விளம்பரம்‌ தேடும்‌ வீணர்களைப்‌ பற்றி எனக்கு கவலையில்லை என்றும் அவர் காட்டமாக தெரிவித்துள்ளார். 

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல்‌ நாட்டி, முடிவுற்ற திட்டப்‌ பணிகளை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார். பின்னர் பேசிய முதலமைச்சர்,” அண்ணாமலையார்‌ கோவில்‌ என்பது தமிழ்நாட்டின்‌ சொத்து. அதைக்‌ கட்டிக்‌ காத்தது கழக அரசு தான். இன்றைய அரசு விழாவில்‌, பல்வேறு துறைகளின்‌ சார்பாக, மொத்தம்‌ 1 லட்சத்து 71 ஆயிரத்து 169 பயனாளிகளுக்கு 693 கோடி ரூபாய்‌ மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்‌ வழங்கப்பட இருக்கிறது.

மேலும் படிக்க:ஒபிஎஸ் சொந்த மாவட்டத்தில் கெத்து காட்டும் இபிஎஸ்.. முக்கிய பிரமுகர்கள் திடீர் ஆதரவு.. உயரும் எண்ணிக்கை.!

70 கோடியே 27 லட்சம்‌ ரூபாய்‌ மதிப்பிலான 91 முடிவுற்ற பணிகள்‌ திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. 340 கோடியே 21 லட்சம்‌ ரூபாய்‌ மதிப்பீட்டிலான 246 புதிய பணிகளுக்கும்‌ அடிக்கல்‌ நாட்டப்பட்டிருக்கிறது. இவையெல்லாம்‌ மதத்தை வைத்து அரசியல்‌ செய்கின்றவர்களுக்கு, அவர்கள்‌ கண்களுக்கெல்லாம்‌ இது தெரியாது. ஏனென்றால்‌ அவர்கள்‌ உண்மையான ஆன்மீகவாதிகள்‌ அல்ல, அவர்கள்‌ உண்மையான ஆன்மீக வியாதிகள்‌; ஆன்மீகப்‌ போலிகள். ஆன்மீகத்தைத்‌ தங்களது அரசியலுக்காக மட்டுமே
பயன்படுத்தக்கூடிய எண்ணத்தைக்‌ கொண்டவர்கள்‌. 

நாங்கள்‌ மதத்தை வைத்து கட்சி நடத்தவில்லை. கட்சியானாலும்‌, ஆட்சியானாலும்‌ மக்கள்‌ முன்‌ நின்று நாங்கள்‌ ஆட்சி நடத்துறோம்‌, கட்சி நடத்துகிறோம்‌!. கோவிலுக்குத்‌ திருப்பணி செய்வது திராவிட மாடலா? என்று சிலர்‌ கேட்கிறார்கள்‌, கேள்வி எழுப்பி வருகிறார்கள்‌. அனைத்துத்‌ துறையையும்‌ சமமாக வளர்ப்பதுதான்‌ “திராவிடமாடல்‌” என்று நான்‌ தொடர்ந்து சொல்லி வருகிறேன்‌. இன்னும்‌ சொன்னால்‌, திராவிட இயக்கத்தின்‌ தாய்க்‌ கழகமான நீதிக்கட்சி ஆட்சி காலத்தில்தான்‌, இந்துசமய அறநிலையத்‌ துறை சட்டமே போடப்பட்டது. 1925- ஆம்‌ ஆண்டு அந்த சட்டம்‌ உருவாக்கப்பட்டது. எதற்கு கோவில்களை முறைப்படுத்துவதற்காக, ஒரு சட்டம்‌ வேண்டுமென்று ஆன்மீக எண்ணம்‌ கொண்டவர்கள்‌ கோரிக்கை வைத்தபோது அதனை ஏற்று, சட்டம்‌ போட்ட ஆட்சிதான்‌ நீதிக்கட்சியின்‌ ஆட்சி.

மேலும் படிக்க:முதல்ல என் தம்பி யுவன் சங்கர் ராஜாவே BJP க்கு ஓட்டு போட மாட்டான்... வாக்கரசியல் வேலைக்கு ஆகாது ராஜா - சீமான்

எது திராவிட மாடல்‌? என்று பிற்போக்குத்தனங்களுக்கும்‌ பொய்களுக்கும்‌ பெருமை எனும்‌ முலாம்‌ பூசி பேசுபவர்கள்‌ இதை முதலில்‌ புரிந்துகொள்ள வேண்டும்‌. ஆன்மீகத்தின்‌ பெயரால்‌ இன்றைக்கு அவர்கள்‌ அரசியல்‌ நடத்த முயற்சிக்கிறார்கள்‌. ஆன்மீகத்திற்கு நாங்கள்‌ எதிரிகள்‌ அல்ல. ஆன்மீகத்தின்‌ பெயரால்‌ மனிதர்களை சாதியால்‌, மதத்தால்‌ பிளவுபடுத்துபவர்களுக்குத்தான்‌ நாங்கள்‌ எதிரிகள்‌. மனிதர்களைப்‌ பிளவுபடுத்தும்‌ கருவியாக ஆன்மீகம்‌ இருக்க முடியாது. மனிதர்களைப்‌ பிளவுபடுத்துவதற்கு ஆன்மீகத்தை பயன்படுத்துபவர்களும்‌ உண்மையான ஆன்மீகவாதிகளாக அவர்கள்‌ நிச்சயமாக இருக்க முடியாது. அறம்‌ என்றால்‌ என்னவென்றே தெரியாத, அறிவுக்கு ஒவ்வாத மூடக்கருத்துகளை முதுகில்‌ தூக்கிச்‌ சுமந்துக்‌ கொண்டிருக்கும்‌ சிலருக்கு போலியான பிம்பங்களைக்‌ கட்டமைக்க வேண்டுமானால்‌ உளறல்களும்‌ பொய்களும்‌ தான்‌ தேவை.

அறிவார்ந்த யாரும்‌, எவரும்‌ இந்த அரசுக்கு ஆலோசனைகள்‌ சொல்லலாம்‌. அறிவார்ந்தவர்கள்‌ பேசுவதை மட்டுமே நாம்‌ காதில்‌ கேட்க வேண்டும்‌.பொய்யும்‌ புரட்டும்‌ மலிவான விளம்பரம்‌ தேடும்‌ வீணர்களைப்‌ பற்றி எனக்கு கவலையில்லை. அப்படி பொய்களை அநாதைகளாக விட்டு, உண்மை எனும்‌ வெளிச்சத்தைத்‌ துணையாகக்‌ கொண்டு நடந்தாலே, நாம்‌ முன்னேறலாம்‌. என்னுடைய மனச்சாட்சிக்கு விரோதம்‌ இல்லாமல்‌ நாங்கள்‌ மக்கள்‌ பணியாற்றி வருகிறேன்‌. என்‌ மீது நீங்கள்‌ வைத்துள்ள நம்பிக்கை நாளுக்கு நாள்‌ அதிகமாகிக்‌ கொண்டிருக்கிறது. உங்கள்‌ நம்பிக்கையைத்தான்‌ நான்‌ எல்லாவற்றையும்விட மேலானதாக நினைக்கிறேன்‌ என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க:திமுக எம்எல்ஏ பாஜகவில் இணைகிறாரா? அவரே கொடுத்த பரபரப்பு விளக்கம்..!