கொரோனா அச்சம் காரணமாக யாருமே உதவ முன்வராத நிலையில் இளையராணி என்ற இளம்பெண் மனிதநேயத்துடன் உதவியதை அறிந்து நெகிழ்ந்து போனேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
கொரோனா அச்சம் காரணமாக யாருமே உதவ முன்வராத நிலையில் இளையராணி என்ற இளம்பெண் மனிதநேயத்துடன் உதவியதை அறிந்து நெகிழ்ந்து போனேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவா் சுசீலா (70). உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி சுசீலாவை அவரது மகன் பாலமுரளி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மூதாட்டி மயங்கி கீழே விழுந்தார். மூதாட்டிக்கு கொரோனா இருக்கலாம் என்ற அச்சத்தால் பொதுமக்கள் யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை. அங்கிருந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனா்.

அரை மணி நேரத்திற்கு மேலாகியும் ஆம்புலன்ஸ் வராத நிலையில், அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற சேலம், காட்டூா் கிராமத்தைச் சேர்ந்த இளையராணி (21), சாலையில் மயங்கி கிடந்த மூதாட்டியை கண்டவுடன் இறங்கி வந்து, முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்றார். பின்னர், மூதாட்டையை மகனின் இருசக்கர வாகனத்தில் தூக்கி பிடித்துக்கொண்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால், மூதாட்டி வழியே உயிரிழந்தார். இளம்பெண்ணின் இந்த செயலுக்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

இந்நிலையில், இளையராணியின் மனிதநேயமிக்க இந்த செயலை அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சேலம் விமான நிலையத்திற்கு அவரை வரவழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- வாகனத்தில் இருந்து மயங்கி விழுந்த மூதாட்டிக்கு #COVID19 அச்சம் காரணமாக யாருமே உதவ முன்வராத நிலையில் இளையராணி என்ற இளம்பெண் மனிதநேயத்துடன் உதவியதை அறிந்து நெகிழ்ந்து போனேன். இன்று சேலம் சென்றிருந்த போது இளையராணியை சந்தித்து மனமார பாராட்டினேன். இளைய தலைமுறை நம்பிக்கையூட்டுகிறது என பதிவிட்டுள்ளார்.
