தமிழக சட்டப்பேரவையில் கொண்டுவந்த தனி தீர்மானத்தின்படி, இலங்கைக்கு உதவி பொருட்களை வழங்குவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் கொண்டுவந்த தனி தீர்மானத்தின்படி, இலங்கைக்கு உதவி பொருட்களை வழங்குவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு அரிசி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. மேலும் விலையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதுஒருபுறம் இருக்க மறுபுறம் இலங்கை முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கை மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதை அடுத்து இலங்கை அரசாங்கம் பல்வேறு நாடுகளிடம் உதவி கோரி உள்ளது. அதன் அடிப்படையில் இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகள் இலங்கைக்கு உதவி செய்து வருகின்றன. கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு 400 மில்லியன் அமெரிக்க டாலர் நாணய பரிமாற்றம் உள்ளடக்கிய நிதி உதவியை இந்தியா வழங்கியது. அதுமட்டுமின்றி 4 லட்சம் டன் எரி பொருளையும் வழங்கியது. 1 பில்லியன் கடன் வசதியின் கீழ் 40 ஆயிரம் டன் அரிசியும் அனுப்பி வைக்கப்பட்டது. பெட்ரோலிய பொருட்களை கொள்முதல் செய்வதற்கு வசதியாக குறுகிய கால கடனாக இந்தியா 500 மில்லியன் டாலர்களையும் வழங்கி உள்ளது.

100 டன் நானோ நைட்ரஜன் திரவ உரங்களையும், 760 கிலோ அளவில் 107 வகையான மருத்துவ உபகரணங்களையும் இந்தியா வழங்கி உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைக்க மத்திய அரசு அனுமதி வழங்க கோரி தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டு வந்தார். அதில் இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை தமிழ்நாட்டில் இருந்து உடனடியாக அனுப்பி வைக்க உரிய அனுமதியை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானம் தமிழக கவர்னர் மூலம் மத்திய அரசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடிக்கும் கடந்த வெள்ளிக்கிழமை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.

இந்த கடிதம் கிடைத்ததும் தமிழக அரசு இலங்கைக்கு அனுப்ப உள்ள உணவு பொருட்கள் மற்றும் மருந்துகளை அனுப்ப மத்திய அரசு அனுமதி அளித்தது. இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் விரிவான கடிதம் எழுதி இருந்தார். அதில் இலங்கை அரசுக்கு மனிதாபிமான உதவிகளை செய்வதில் மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து தமிழக அரசு செயல்படலாம் என்றும், இதில் தமிழக தலைமை செயலாளர் நேரடியாக பங்கேற்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை அடுத்து மத்திய அரசுடன் இணைந்து இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க தமிழக அரசு தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன் இன்று மாலை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தி முக்கிய முடிவெடுக்க உள்ளார். அதன்பிறகு இலங்கைக்கு உதவி பொருட்கள் விரைந்து அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
