பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு வணிகர்களின் கருத்து கேட்டது திமுக அரசுதான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு வணிகர்களின் கருத்து கேட்டது திமுக அரசுதான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் தமிழக வணிகர் விடியல் மாநாடு நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொண்டு பேசினார். அப்போது, திருச்சி என்றால் தலைவர் கலைஞர் அவர்கள் அடிக்கடி சொல்வார், தீரர்கள் கோட்டம் என்று. திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பல்வேறு மாநாடுகள் திருச்சியில் நடைபெற்றிருக்கிறது. திருச்சி என்றால் திமுக-விற்கு ஒரு திருப்புமுனை. அதுமாதிரி இன்றைக்கு திருச்சியில் வணிகர்கள் நடத்தக்கூடிய இந்த மாநாடு, ஒரு திருப்புமுனையை உருவாக்கக்கூடிய வகையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த மாநாடு நடக்கக்கூடிய தேதி மே.5 ஆம் தேதி. இந்தத் தேதியின் பின்னால் வணிகர்களான உங்களுடைய வரலாறு இருக்கிறது. 1982 ஆம் ஆண்டு அன்றைய அதிமுக அரசு, நுழைவு வரி என்ற புதிய சட்டத்தைக் கொண்டு வந்து அதை உடனடியாக நடைமுறைப்படுத்தியது. அதை எதிர்த்து முதன் முதலில் சேலம் மாவட்டத்தில் மிகப்பெரிய அளவில், வணிகர்களை ஒன்று திரட்டி, மேற்குறிப்பிட்ட வரிகளை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று ஒரு மிகப் பெரிய போராட்டம் சேலம் மாவட்டத்திலே நடந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் ஆங்காங்கே வணிகர்கள் போராட்டங்களை நடத்திக் காட்டினார்கள். அதன்பிறகு, சென்னையில் ஒரு மிகப்பெரிய எதிர்ப்பு ஊர்வலமும் நடத்திக் காட்டப்பட்டிருக்கிறது. சென்னையில் இருக்கக்கூடிய சாந்தோம் பகுதியில் கண்டன மாநாடும் நடத்தப்பட்டது. அப்போது போராட்டத்தில் காவல்துறையினரால் வணிகர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டார்கள்.

அப்போதைய அதிமுக அரசை வன்மையாகக் கண்டிக்கும் வகையில், தமிழக வணிகர்கள், போராட்டங்கள், ரயில் மறியல் போன்ற பல போராட்டங்களில் ஈடுபட்டார்கள். அப்போது அவர்கள் கைது செய்யப்பட்டு, சிறையிலும் அடைக்கப்பட்டார்கள். அப்படி கைது செய்யப்பட்ட நாள்தான் மே 5 ஆம் தேதி. அப்படி சிறை வைக்கப்பட்ட நாளை வணிகர் தினமாக இன்றைக்கு நீங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள். இப்போது நடப்பது திமுக ஆட்சி, மன்னிக்க வேண்டும் நமது ஆட்சி. எனவே, இந்த மே 5 ஒரு மகிழ்ச்சிக்குரிய நாளாக இந்த மாநாட்டின் மூலமாக நாம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறோம். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியானது வணிகர்களது நலனைப் பேணும் ஆட்சியாகத்தான் எப்போதுமே இருந்திருக்கிறது; அப்படித்தான் இருக்கும். வணிகவரித் துறை என்று ஒரு துறையே செயல்பட்டு வருகிறது. வணிகவரித் துறையானது அரசுக்கு வருகிற வருவாயில் நான்கில் மூன்று பங்கை ஈட்டித்தரும் ஒரு முக்கியத் துறையாக விளங்கிக் கொண்டிருக்கிறது. வணிகர்களின் நலன் காக்கப்பட்டால்தான் அரசுக்கு வரும் வருவாயின் நலனும் காக்கப்படும் என்ற அந்த செய்தியை நான் உளப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். ஆட்சிப் பொறுப்பேற்று அனைத்து காலக்கட்டத்திலும் வணிகர்களின் நலனைக் காப்பதில் மிகவும் அக்கறை கொண்ட அரசாகச் செயல்பட்டு வந்துள்ளோம் என்பதை நீங்கள் யாரும் மறக்க மாட்டீர்கள். கடந்த தேர்தல் அறிக்கையில், வணிகர்களின் நலனைக் காப்பதற்காக வணிகர் நல வாரியம் சீரமைக்கப்பட்டு அதனால் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் அதிகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த அடிப்படையில், ஆட்சிப் பொறுப்பேற்ற உடனேயே புதிய நலத் திட்ட உதவிகள் வணிகர் நல வாரியத்தால் வணிகப் பெருமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால், தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தை 1989-ஆம் ஆண்டு உருவாக்கியவரே நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்தான். கழக ஆட்சியில்தான் அந்த வாரியமே உருவாக்கப்பட்டது.

முந்தைய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் 2007-ஆம் ஆண்டு வணிகர் நல வாரியத்தின் கீழ், ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த குடும்பநல உதவித் தொகை ரூ.20,000/-லிருந்து ரூ.50,000/- ஆக உயர்த்தப்பட்டது. இதய அறுவை சிகிச்சை மற்றும் புற்றுநோய் அறுவை சிகிச்சைகளுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.25,000/- உதவித் தொகை ரூ.50,000/- ஆக உயர்த்தப்பட்டது. பெண் உறுப்பினர்களுக்கு கருப்பை அறுவை சிகிச்சைக்கு ரூ.20,000/- உதவித் தொகை வழங்கப்படுகிறது. உறுப்பினர்களின் வாரிசுகளின் கல்லூரிப் படிப்பிற்கு முன்னர் வழங்கப்பட்டு வந்த வருடாந்திர கல்வி உதவித் தொகை ரூ.3,000/- இருந்து ரூ.5,000/- ஆக உயர்த்தப்பட்டது. நலிவுற்ற வியாபாரிகளுக்கு கூட்டுறவுத் தொழிற்கூடங்களில் தயார் செய்யப்படும் பெட்டிக் கடை அல்லது மூன்று சக்கர மிதிவண்டி வாங்க ரூ.10,000/- நிதி உதவி வழங்கப்படுகிறது. வணிகர் நல வாரியத்தில் இதுவரை பதிவு செய்துள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 84,101. இந்த வாரியத்தின் நலத் திட்டங்களின் வாயிலாக 31.03.2022 வரை ரூ.3 கோடி மதிப்பீட்டில் 8,875 உறுப்பினர்கள் பயனடைந்துள்ளனர். இவ்வாரியத்தில் இணையவழி மூலமாகவே உறுப்பினராகப் பதிவு செய்து கொள்ளும் வசதி வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி அவர்களால் 16.06.2021 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. பேரிடர் காலங்களில் சிறு, குறு வணிகர்களுக்கு உதவி செய்யும் வகையில், சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தில் பதிவு பெற்று, விற்றுமுதல் அளவு ரூ. 40 இலட்சத்துக்கு உட்பட்ட சிறு வணிகர்கள் மற்றும் இச்சட்டத்தின்கீழ் பதிவுபெறாத குறு வணிகர்களை இவ்வாரியத்தில் உறுப்பினர்களாகச் சேர்க்கவும், அதற்கான கட்டணத் தொகை ரூ.500/- செலுத்துவதிலிருந்து 15.07.2021 முதல் 14.10.2021 வரையிலான மூன்று மாத காலத்திற்கு விலக்களிக்கப்பட்டது. இச்சலுகையை 31.03.2022 வரை கால நீட்டிப்பு செய்து உத்தரவிட்டவன் நான்தான் என்பதைப் பெருமகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். இந்தச் சிறப்பு முயற்சியின் பயனாக, 36,952 வணிகர்கள் புதிதாக தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்திருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
