நான் துபாய்க்கு பணத்தை கொண்டு வரவில்லை தமிழக மக்களின் மனத்தை எடுத்து வந்துள்ளேன் என்றும் எனது வெளிநாட்டு பயணத்தை திசை திருப்ப வேண்டும் என்பதற்காக சிலர் தவறான பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர் என்றும்  முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

முதலமைச்சர் பேச்சு:

அபுதாபி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் அங்குள்ள தமிழ் சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது பேசிய அவர், நான் துபாய்க்கு பணத்தை கொண்டு வந்துள்ளதாக சிலர் எனது பயணம் குறித்து அவதூறு பரப்புகின்றனர். நான் பணத்தை கொண்டு வரவில்லை. தமிழ் மக்களின் மனத்தை கொண்டுவந்துள்ளேன். எனது வெளிநாட்டு பயணத்தை திசை திருப்ப வேண்டும் என்பதற்காக சிலர் தவறான பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர் என்று கூறினார்.

தமிழகத்தை தெற்காசியாவிலேயே சிறந்த மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் உழைத்துக்கொண்டிருக்கிறேன். பேச்சை குறைத்து நம் திறமையை செயலில் காட்ட வேண்டும் என்ற நோக்கில் செயலாற்றி வருவதாக முதலமைச்சர் பேசினார். தமிழ்நாட்டை நோக்கி தமிழர்களின் மனங்களை ஈர்க்கும் விதமாகத்தான் எனது பயணம் அமைந்துள்ளது. எனது ஐக்கிய அமீரக பயணத்தின் வெற்றியை சிலரால் தாங்கி கொள்ள முடியவில்லை என்று விமர்சித்தார். 

துபாய் பயணம்:

4 நாட்களில் துபாய் பயணத்தை முடித்து விட்டோமே, இன்று 4 நாட்கள் இருக்க கூடாதா என்ற ஏக்கம் உள்ளது என்று பேசிய முதலமைச்சர் துபாய் புர்ஜ் கலிஃபாவில் செம்மொழியான தமிழ் மொழியா பாடல் ஒளிந்தது மிகுந்த மகிழ்ச்சியை தந்திருக்கிறது என்றார். முன்னதாக துபாயில் நடைபெற்ற சர்வதேச கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கினை திறந்து வைப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நான்கு நாட்கள் பயணமாக ஜக்கிய அரசு அமீரகம் வந்தார். தமிழக முதலமைச்சராக பதவியேற்ற பிறகு செல்லும் முதல் வெளிநாட்டு பயணமாகும். இதனைதொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி, துபாயில் ஐக்கிர அரபு அமீரக வர்த்தகம் மற்றும் வெளிநாட்டு பொருளாதார துறை அமைச்சர்களுடனான ஆலோசனை நடந்தது.

இந்த ஆலோசனையில், ஐக்கிய அரபு நாடுகளில்‌ உள்ள குறு, சிறு மற்றும்‌ நடுத்தர நிறுவனங்களுக்கும்‌, தமிழ்நாட்டிற்கும்‌ இடையே உள்ள வர்த்தக உறவுகளை மேம்படுத்துதல்‌, தொழில்‌ சூழலை மேம்படுத்துதல்‌, மோட்டார்‌ வாகனம்‌ மற்றும்‌ வாகன உதிரி பாகங்கள்‌, பொறியியல்‌, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகளில்‌ இணைந்து பணியாற்றி முதலீடுகள்‌ மேற்கொள்வதன்‌ மூலம்‌ பொருளாதாரம்‌ மற்றும்‌ வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்தும்‌ ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

முதலீட்டாளர்கள் சந்திப்பு:

தமிழ்நாட்டில்‌ தொழில்‌ தொடங்குவதற்கு நிலவும்‌ சாதகமான சூழ்நிலையை எடுத்துக்கூறி, ஐக்கிய அரபு அமீரகத்தின்‌ இரு அமைச்சர்களையும்‌ தமிழகம்‌ வருமாறு அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில்‌ தொழில்‌ தொடங்கிட, முதலீட்டாளர்கள்‌ சூழுவினையும்‌ தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டுமென்றும்‌ கேட்டுக்‌ கொண்டார்‌. இதனையடுத்து சர்வதேச கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 

தொடர்ந்து மறுநாள் , துபாயில் முதலீட்டாளர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ரூ.2600 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்துதாகின. அதே போல் இன்று அபுதாபியில் அமீரக தொழில் துறை அமைச்சர் சுல்தான் பின் அகமதுவை சந்தித்த பேசினார். பின்னர், ஐக்கிய அரபு அமீரக முதலீட்டாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.இதில் தமிழகத்தில் 3500 கோடி ரூபாய் மதிப்பிலான மூன்று திட்டங்களுக்கு லுலு நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.

மேலும் படிக்க: அபுதாபியில் ரூ. 3,500 கோடி ஒப்பந்தம் கையெழுத்து.. அமீரக தொழில்துறை அமைச்சருடன் முதலமைச்சர் சந்திப்பு..