Asianet News TamilAsianet News Tamil

கவலைபடாதீங்க தம்பி.. அம்மா நல்லா இருக்காங்க..! பணியில் இருக்கும் ராணுவ வீரருக்கு தைரியம் கூறிய எடப்பாடி..!

தங்கள் தாயாருக்குத் தேவையான மருந்துகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. மேலும் அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்ததில் காய்ச்சலோ, இருமலோ, மூச்சுத்திணறல் உள்ளிட்ட எந்தப் பிரச்சனைகளும் இல்லை. நலமாக உள்ளார். தாங்கள் தைரியமாக நிம்மதியுடன் இருங்கள்!

cm palanisamy's respond to a army man's tweet
Author
Chennai, First Published Apr 23, 2020, 7:35 AM IST

கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு தமிழகத்திலும் மிகக்கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஊரடங்கு காரணமாக மக்கள் வீடுகளிலேயே முடங்கி பெரிதும் அவதிக்குள்ளாகி இருக்கும் நிலையில் அவர்களுக்கான அத்தியாவசிய பணிகளை ஒட்டு மொத்த அரசு நிர்வாகமும் அசுர வேகத்தில் செய்து வருகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரடியாக மட்டுமன்றி சமூக வலைதளங்கள் மூலமாகவும் தனக்கு வரும் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறார். அந்தவகையில் நேற்று தமிழக முதல்வரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கை குறிப்பிட்டு ரவிக்குமார் என்னும் ராணுவ வீரர் கோரிக்கை விடுத்திருந்தார். அதில்,  "ஐயா நான் மத்தியப் பாதுகாப்புப் படையில் அகமதாபாத்தில பணியில் உள்ளேன். எனது தாயாருக்கு 89 வயது. வீட்டில் தனியாக உள்ளார். அவருக்கு உடல் நிலை சரியில்லை. எனக்குத் தந்தையும் இல்லை. சகோதரனும் இல்லை. எனது தாயாருக்கு மருத்துவ உதவி தேவை" என்று குறிப்பிட்டிருந்தார்.

cm palanisamy's respond to a army man's tweet

அதற்கு பதிலளித்த முதல்வர், "தாய்நாட்டைக் காக்கும் பணியில் ஈடுபட்டு வரும் தங்கள் அர்ப்பணிப்பிற்குத் தலைவணங்குகிறேன். கண்டிப்பாக தம்பி. கவலை கொள்ள வேண்டாம். தங்கள் தாய்க்குத் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் உடனே கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்" என்று கூறியதுடன் மட்டுமில்லாது உடனடியாக ராணுவ வீரரின் வீட்டிற்கு அதிகாரிகளை அனுப்பி அவரது தாய்க்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய உத்தரவிட்டார். அதன்படி அதிகாரிகளும் ராணுவ வீரரின் தாயை சந்தித்து மருந்துகள் வழங்கி அதுதொடர்பான புகைப்படத்தை முதல்வருக்கு அனுப்பினர்.

 

பின் மீண்டும் ராணுவ வீரருக்கு ட்விட்டரில் பதிலளித்த முதல்வர், "தங்கள் தாயாருக்குத் தேவையான மருந்துகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. மேலும் அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்ததில் காய்ச்சலோ, இருமலோ, மூச்சுத்திணறல் உள்ளிட்ட எந்தப் பிரச்சனைகளும் இல்லை. நலமாக உள்ளார். தாங்கள் தைரியமாக நிம்மதியுடன் இருங்கள்!" என்று குறிப்பிட்டார். முதல்வரின் உடனடி நடவடிக்கை சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பலரது பாராட்டையும் பெற்று வருகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios