எங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் கட்சிக்கு விரோதமாக நடந்ததால் நடவடிக்கை எடுக்கிறோம். இதற்கு ஸ்டாலின் ஏன் கொந்தளிக்கிறார் என தமிழக முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.


தினகரனுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலிடம் மனு கொடுத்துள்ளார். இதன் அடிப்படையில் மூவரும் விளக்கம் அளிக்கும்படி சபாநாயகர்  தனபால் நோட்டீஸ் அனுப்பினார். நடுநிலை தவறி செயல்படுவதாகவும், அதிமுக ஆட்சியைக் காப்பாற்ற மூவரையும் தகுதி நீக்கம் செய்ய ஆட்சியாளர்களுக்கு சபாநாயகர் துணை போவதாகக் கூறி, அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர சட்டப்பேரவை செயலரிடம் திமுக மனு அளித்துள்ளது. 
 இந்நிலையில் திமுகவின் செயல்பாடுகளை கேள்விக்குள்ளாக்கி விமர்சனம் செய்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இதுதொடர்பாக இன்று அவர் அளித்த பேட்டியில், “ஆளுங்கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் கட்சிக்கு விரோதமாகச் செயல்படுவதாக கொறடா, சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளார். இது அதிமுகவின் உட்கட்சி பிரச்னை. இதில் திமுக ஏன் தலையிடுகிறது எனத் தெரியவில்லை.
எங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் கட்சிக்கு விரோதமாக நடந்ததால் நடவடிக்கை எடுக்கிறோம். அவர்கள் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் அல்ல. இதற்கு ஸ்டாலின் ஏன் கொந்தளிக்கிறார் எனத் தெரியவில்லை. அவருடைய கோபமும் கொந்தளிப்பும் திமுகவுக்கும் தினகரன் கட்சிக்கும் எவ்வளவு நெருக்கம் இருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. 
எந்த அடிப்படையில் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை திமுக கொடுத்துள்ளது என்பது பற்றி இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. நடைபெற்று முடிந்த தேர்தல் உள்பட 22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலிமும் 39 லோக்சபா தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்.” என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.