Asianet News TamilAsianet News Tamil

மேகதாது அணை விவகாரம்... அனைத்து கட்சி கூட்டத்தில் 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்...!

மேகதாது பிரச்சனை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்து சட்டமன்றக் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

CM MK Stalin pass 3 resolution on all party meeting for Karnataka dam issue
Author
Chennai, First Published Jul 12, 2021, 3:11 PM IST

கர்நாடக அரசு, மேகதாதுவில் அணையைக் கட்ட உத்தேசித்துள்ள நிலையில், காவிரி நதிநீரில் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டவும், காவிரி நதிநீரைக் கொண்டு விவசாயம் செய்து வரும் தமிழக விவசாயிகளின் நலனை பாதுகாக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல், எவ்வித அனுமதியும் பெறாமல் மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட முயற்சித்து வருகிறது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. 

CM MK Stalin pass 3 resolution on all party meeting for Karnataka dam issue

இந்த கூட்டத்தில் திமுக ஆர்.எஸ். பாரதி, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், அதிமுக சார்பில்  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  பி.எச். மனோஜ் பாண்டியன், இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில்  கே.எஸ். அழகிரி,  செல்வப் பெருந்தகை, பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், வீ.பி. துரைசாமி, பாமக சார்பில் ஜி.கே. மணி, எஸ்.பி. வெங்கடேஸ்வரன், மதிமுக பூமிநாதன், கு. சின்னப்பா, விசிக சார்பில் தொல். திருமாவளவன், ரவிக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி சார்பில் கே. பாலகிருஷ்ணன், பி. சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முத்தரசன்,  பெரியசாமி, மனிதநேய மக்கள் கட்சி சார்பில் முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, ப. அப்துல் சமது, தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வேல்முருகன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில்  ஈஸ்வரன், எஸ். சூரியமூர்த்தி, புரட்சி பாரதம் கட்சி சார்பில் பூவை ஜெகன் மூர்த்தி, குட்டி ஆகியோர் பங்கேற்றனர். 

CM MK Stalin pass 3 resolution on all party meeting for Karnataka dam issue

இந்த கூட்டத்தில் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்திற்கு எதிராக 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.  உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரியின் கீழ்ப்படுகை மாநிலங்களின், முன் அனுமதியைப் பெறாமல் மேகதாதுவில் எந்தவொரு கட்டுமானப் பணியையும் மேற்கொள்ளக் கூடாது. அதை மீறி, தற்பொழுது மேகதாதுவில் அணை கட்டுவதற்கான முயற்சிகளை கர்நாடக அரசு முழு முனைப்புடன் செய்து வருவது மிகவும் கண்டனத்திற்குரியது. இத்திட்டத்தினால் தமிழ்நாடு விவசாயிகளுக்குத் தேவையான நீர் கிடைப்பது பாதிப்படையும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிரான இத்தகைய முயற்சி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மாட்சிமைக்கு விடப்படும் சவாலாகும். எனவே, கர்நாடக அரசின் இத்திட்டத்திற்கு, இதில் தொடர்புடைய ஒன்றிய அரசின் அமைச்சகங்கள் எவ்விதமான அனுமதிகளையும் வழங்கக் கூடாது என ஒன்றிய அரசைக் கேட்டுக்கொள்வது என முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

CM MK Stalin pass 3 resolution on all party meeting for Karnataka dam issue

இந்த அணை அமைப்பதற்கான முயற்சிகளைத் தடுப்பதில் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மாநிலத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தங்களுடைய முழு ஆதரவையும், முழு ஒத்துழைப்பையும் வழங்கும் என இரண்டாவது தீர்மானமும், தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை முழுமையாக பிரதிபலிக்கும் வகையில், இக்கூட்டத்தின் தீர்மானங்களை ஒன்றிய அரசிடம் அனைத்துக் கட்சியினரும் நேரில் சென்று முதற்கட்டமாக வழங்குவது என்றும், அதன்பிறகு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும் வழக்கு உள்ளிட்ட சட்டபூர்வ நடவடிக்கைகள் மற்றும் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வது என்றும் 3வது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios