முதலமைச்சர் மற்றும் காவல் உயர் அதிகாரியை சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நடிகருமான கருணாஸ் தலைமறைவு என தகவல் வெளியாகியுள்ளது. 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், கைது பயத்தில் கருணாஸ் தலைமறைவாகி உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலை முயற்சி, கொலை மிரட்டல், கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தலைமைறவான கருணாஸை சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் மேடி வருகின்றனர். தலைமறைவான கருணாஸை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக நுங்கம்பாக்கம் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் இந்து மக்கள் முன்னணி நிறுவனர் நாராயணன் புகார் ஒன்றை அளித்தார். 

அதில், கடந்த 17ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் முக்குளத்தோர் புலிப்படை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அந்த அமைப்பின் தலைவரும் எம்எல்ஏவுமான கருணாஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை அச்சுறுத்தும் வகையில் தி.நகர் துணை ஆணையர் அரவிந்தனை நான் அன்றைக்கே அவரது டவுசரை கழட்டியிருப்பேன் வேண்டுமென்றால் காக்கிச் சட்டையை கழற்றி வைத்து விட்டு வாருங்கள் பார்க்கலாம் என்ற அவர் காவல் அதிகாரிகளை மிரட்டும் தொனியில் பேசியிருந்தார். மேலும் எடப்பாடி பழனிசாமியே நான் அவரை அடிப்பேன் என்று பயப்படுவார் என்று கருணாஸ் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். 

இந்நிலையில் இது தொடர்பாக நாராயணன் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரின் படி போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உரிய நடவடிக்கை எடுக்க நுங்கம்பாக்கம் போலீசாருக்கு உத்தரவிட்டார். நேற்று நுங்கம்பாக்கம் போலீசார் நடிகரும், திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான  கருணாஸ் மீது ஐபிசி 153, 153(A)(1)(b)(c),307, 506(i),120(b), சிட்டி போலீஸ் ஆக்ட் ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, அடுத்து கட்ட நடவடிக்கையாக நடிகர் கருணாஸை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் கருணாஸ் தலைமறைவு உள்ளதாக போலீசார் தரப்பில் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு முற்றிலுமாக கருணாஸ் மறுப்பு தெரிவித்துள்ளார். தாம் சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் இருப்பதாக கருணாஸ் தனியார் தொலைக்காட்சிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.