தமிழக தலைமை செயலகத்தின்  மிக  முக்கிய அறை அது. கொரோனா தடுப்பு குறித்து ஆலோசிப்பதற்காக கடந்த மாதம் ஒரு உயர்மட்ட கூட்டம் நடந்து  கொண்டிருந்தது.  ஆலோசனையின் நடுவில், ரஷ்யா மற்றும்  பிரேசில் நாடுகளின் அரசாங்கம் ரகசியமாக  பரிசோதித்துப் பார்த்த ஒரு முக்கியமான மருந்து குறித்து பேச்சு எழுந்தது. அந்த  மருந்தைப் பற்றிப் பேச்சை துவக்கிய அந்த அரசுச் செயலருக்கு அதன் பெயர் சட்டென்று நினைவுக்கு வரவில்லை. சில நொடிகள் நெற்றியை வருடினார். ஆனால் அப்போது மின்னல் போல் அந்த மருந்தின் பெயரை உச்சரித்தார் ஒருவர்! அத்தனை பேருக்கும் ஆச்சரிய அதிர்ச்சி,  பெண் உயரதிகாரி ஒருவர் மெய்மறந்து கைகளையே தட்டி ‘ஹேட்ஸ் ஆஃப் சார்’ என்று சிலிர்த்துவிட்டார். இந்த நிகழ்வானது தமிழக அரசு இயந்திரத்தின் மிக முக்கிய அதிகாரிகள் மத்தியில் இன்று வரை டிரெண்டிங்காக உள்ளது. 

வேற்று கண்டத்து அரசாங்கங்கள் ரகசியமாய்ப் பயன்படுத்திய மருந்தின் பெயரை தெரிந்து வைத்திருந்து, அதை சட்டென்று சொன்ன அந்த நபர் யார் தெரியுமா?  சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து, அரசியலில் இணைந்து, விஸ்வாசம் ஒன்றையே மூலதனமாக்கி உயர்ந்து, இன்று ‘எங்களின் எளிய முதல்வரே!’ என்று தமிழக மக்களால் அழைக்கப்படும் சாட்ஸாத் எடப்பாடியாரே தான்.


 
முதல்வர் நாற்காலியால்  பவ்யமாக அவர் வந்தமர்ந்தபோது சற்றே பூடகமாக சிரித்த அத்தனை மனிதர்களையும் பார்த்து புன்னகையை மட்டுமே தந்தவர் இந்த மூன்றாண்டு காலத்தில் தன்னை நிரூபித்துக் காட்டி, ’மற்ற மாநில முதல்வர்களுக்கு முன்னோடியாக திகழ்கிறார்’ என்று பிரதமர் வாயாலேயே பாராட்டப் பெற்றுள்ளார். சர்வதேச நாடுகளின் தலைவர்களே பிரமிக்கும் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியின் வாயால் ‘தி பெஸ்ட்’ என்று பாராட்டை பெறுவதென்பது ஆயிரம் ஆஸ்கார், பல்லாயிரம் செவாலியே விருதுகளைப் பெறுவதற்கு சமம். ஆனால் அதையும் சாதித்துக் காட்டிவிட்டு, ’இந்த மாநிலத்தின் அதிகாரம் உங்கள் கையில். நீங்களே ஆட்சியாளர்கள்!’ என்று மக்களின் கையில் அதிகாரத்தைக் கொடுக்கும் எளியவராய் இருக்கிறார் எடப்பாடியார். 

இப்பேர்ப்பட்ட எடப்பாடியாரை ‘தமிழக அரசியலில்  ஜெயலலிதா, கருணாநிதிக்குப் பின்... அல்ல  அவர்களுக்கு இணையானதொரு ராஜதந்திரியாக இருக்கிறார் இ.பி.எஸ்!’ என புகழ்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். காரணம்? என்று அவர்களிடம் கேட்டபோது கிடைத்த விளக்கம் இதுதான்....

“நீட் தேர்வினை வைத்து மிகப்பெரிய டேமேஜிங் அரசியலை செய்ய முயன்றார் ஸ்டாலின். ஆனால் ‘2009ல் மத்தியில் அமைந்த காங்கிரஸ் கூட்டணி அரசில் தி.மு.க. பங்கு கொண்டிருந்த போதுதான் நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது அதை கைகட்டி வரவேற்றது தி.மு.க. ஆனால் எங்கள் புரட்சித்தலைவி அம்மாவோ, இது ஏழை மாணவ மாணவிகளின் மருத்துவக் கனவை சிதைக்கும். வேண்டாம் இத்தேர்வு! என்று தடுத்தார். ஆனால் அதையும் மீறினார்கள். எனவே இந்தியாவில், அதிலும் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு துவக்கப்புள்ளி வைத்ததே  தி.மு.க. கூட்டணிதான்!’ என்று தடாலடியாய் ஒரு உண்மையை தோண்டி எடுத்து வெளிப்படுத்தி, ஸ்டாலின் நரித்தனத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார். 

ஆனாலும் ‘எங்களுக்கும் நீட்டுக்கும் சம்பந்தமில்லை. தமிழக ஏழை மற்றும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு டாக்டர் படிப்பு வாய்க்கலேன்ன நாங்க ஒண்ணும் பண்ண முடியாது.’ என்று ஜஸ்ட் லைக் தட் ஆக கை கழுவிவிட்டு போகவில்லை. என்னதான் விபத்தினை தி.மு.க. நிகழ்த்தியிருந்தாலும், அதில் காயம்பட்டோரை தன் மடியில் அள்ளிப்போட்டு அவசர சிகிச்சை கொடுத்து அவர்களின் உயிரை காப்பாற்றியிருக்கிறார் தமிழக முதல்வர்  இ.பி.எஸ்.


அதுதான், அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு வழிவகை செய்யும் ‘7.5 சதவீத   உள் ஒதுக்கீடு!’. அரசின்  மூத்த அதிகாரிகளுடன் ‘நீட் லகான்  மத்திய அரசின் கையில் இருந்தாலும், நம்ம மாநிலத்தின் ஏழைப் பிள்ளைகளை நாம தோளில் தூக்கிவைத்து இந்த  உயரத்தை கடக்க உதவியே ஆகணும். அதுக்கு வழி கண்டுபிடிக்கணும்.’ என்று மீண்டும் மீண்டும் பேசித்தான் ஒரு வழியை கண்டுபிடித்தார்.

அதன்படி கடந்த மார்ச் 21-ம் தேதியன்று தமிழக சட்டசபையில் 110 விதியின் கீழ் தமிழக முதல்வர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் ‘அரசுப்பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், நகராட்சிப் பள்ளிகள், ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலப்பள்ளிகள், கள்ளர் சீர்மரபினர் பள்ளிகள், வனத்துறைப் பள்ளிகள் உள்ளிட்ட பள்ளிகளில் 1 ம் உதல் 12ம் வகுப்பு வரையில் படித்து, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் சேர்வதில் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் வகையில் சிறப்புச் சட்டம் ஒன்றை இயற்றிட, தகவல்களை திரட்டும் வகையில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்படுகிறது.’ என்பதே. 

தமிழகத்தின் விளிம்பு நிலை மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய, முதல்வர்  குறிப்பிட்ட வகையிலான பள்ளிகளை நம்பிப் படித்த குடும்பங்களின் கண்களில் ஒளிவிளக்கை ஏற்றிய அறிவிப்பு அது. ஏழை எளிய மக்கள் இந்த அறிவிப்பையும், அதை அறிவித்த முதல்வரையும் கொண்டாடினர். முதல்வர் கூறியபடியே உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. அவரும்  மிக துல்லியமான ஆய்வுகளை நடத்தி ஒரு ரிப்போர்ட்டை வழங்கினார். அது பலவித ஆய்வுகளுக்கும், விவாதங்களுக்கும் உட்படுத்தப்பட்டு பின், மேற்படி பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளில் நீட் பாஸ் செய்தவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீட்டை வழங்கலாம்! எனும் மசோதாவை கொண்டு வந்து, அதை சட்டமன்றத்தில் நிறைவேற்றி, பின் கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. 

இந்த ஆண்டு  அதாவது 2020-21 கல்வியாண்டிலேயே இந்த மிகப்பெரிய வரத்தினை தமிழகத்தின் ஏழை எளிய பிள்ளைகளுக்கு வழங்கிட வேண்டும் என்பதில் குறியாய் இருந்தார் முதல்வர் எடப்பாடியார். ஆனால் சில பல நடைமுறை சிக்கல்களாலோ, என்னவோ ஆளுநரின் மாளிகையிலேயே அந்த கோப்பு தங்கியது. 

இந்த நிலையில்தான் தி.மு.க. தன் நரித்தனத்தை மீண்டும் காட்டத் துவங்கியது. ‘அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீட்டு மசோதா என்பது ஒரு நாடகமே. நான் மசோதவை தருவது போல் தருவேன், நீங்கள் அதை பீரோவில் வைத்துவிட்டு தூங்கிவிடுங்கள் என்று முதல்வரும், கவர்னரும் சேர்ந்து நடிக்கின்றனர்.’ என்று வதந்தியை கிளப்பினர். மேலும் இதை வைத்து தொடர் ஆர்பாட்டங்களுக்கும் திட்டமிட்டனர். மொத்தத்தில் மிக லோக்கலான அரசியலை இதை வைத்து நடத்திட திட்டமிட்டார் ஸ்டாலின். 

ஆனால் அதற்கெல்லாம் எடப்பாடியார்  ஜஸ்ட் லைக் தட் ஆக ஒரு செக் வைத்துவிட்டார். அதாவது, நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு மருத்துவ  மாணவர்கள் சேர்க்கை தொடங்கிவிட்டது. இனியும் தாமதித்தால் ஏழை எளிய பிள்ளைகளின் கனவு கலைந்துவிடும்! என்றெண்ணிய முதல்வர், அரசியல் சாசனத்தின் 162-ம் ஷரத்தின் படி தமிழக அரசே கொள்கை முடிவுகளை எடுத்து அதை அரசாணையாக வெளியிடும் உரிமை இருப்பதை சுட்டிக்காட்டி, அதன் வழியாக இந்த முடிவையும் அரசாணையாக்கிவிட்டார். 

இதன் லேட்டஸ் சாராம்சங்களின் படி, அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் படித்து, நீட் தேர்வில் தகுதி பெறும் மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.எஸ்.எம்.எஸ்., பி.ஏ.எம். உள்ளிட்ட  மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த உள் ஒதுக்கீட்டின் படி நடக்கும் மாணவர் சேர்க்கையில் 2020-21ம் ஆண்டில் இருந்து 69 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றப்படும்! என்பது உள்ளிட்ட தாராள சிறப்பம்சங்களைச் சொல்லி ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த தகுதியுள்ள பிள்ளைகளின் வயிற்றில் பாலை வார்த்துள்ளார். 

இதன் மூலம் எதிர்ப்பு மற்றும் அற்ப அரசியல் பண்ண நினைத்தவர்களுக்கு  செக் வைத்துள்ளார். சிம்பிளாய்ச் சொல்வதென்றால் ஸ்டாலினை தனது லெஃப்ட் ஹாண்டில் டீல் பண்ணி, அப்படியே அலேக்காக தூக்கிவீசியிருக்கிறார் முதல்வர். 
எடப்பாடியார் செய்திருப்பது ஒரு வரலாற்றுச் சாதனை. காரணம் பணமில்லாத காரணத்தால் மருத்துவக்கல்லூரியில் சேரும் வழியில்லாததாலும், மருத்துவ படிப்பில் சேரும் விஷயத்தில் மத்திய அரசின் நடைமுறைகளால் ஏழை பிள்ளைகளுக்கான வழிகள் பெருமளவு அடைக்கப்பட்டுவிட்ட நிலையிலும் முதல்வரின் கரங்கள் அந்த வாசலை விசாலமாய்  திறந்துவிட்டுள்ளன. 
இதன் மூலம் பல்லாயிரம் ஏழை பிள்ளைகள் மருத்துவ கல்லூரியை படிப்பதுடன், பல லட்சம் எளிய மக்களுக்கு இலவசமாகவும், குறைந்த செலவிலும் சிகிச்சைகள் கிடைத்து அவர்களின் இன்னுயிர்  காப்பாற்றப்படும். 

இப்போது புரிகிறதா நம் முதல்வர் எடப்பாடியார் ஒரு அரசியல் ராஜதந்திரி என்று! இதன் மூலம் எடப்பாடியார் தலைமையிலான அ.தி.மு.க.வுக்கு இந்த  2021 சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய மைலேஜை இந்த சட்டம் நிச்சயம் வாங்கிக் கொடுக்கும். ஏழை, எளிய மற்றும் கீழ் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த பல  லட்சம் நபர்களின் வாக்குகளும், இளைஞர் சமுதாயத்தின் வாக்குகளும் அ.தி.மு.க.வை ஆதரிக்க வாய்ப்புகள் அதிகமாகி உள்ளது.” என விளக்கி முடித்தனர். 
இ.பி.எஸ். யார் என்று தெரிகிறதா!!