Asianet News TamilAsianet News Tamil

நடிகர் விவேக்கின் மறைவு; தமிழகத்திற்கு மிகப்பெரிய இழப்பு... முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்...!

சின்னக் கலைவாணர் விவேக்கின் மறைவு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார். 
 

Cm Edappadi palanniswami mourns viveks passed away
Author
Chennai, First Published Apr 17, 2021, 9:54 AM IST

தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத காமெடி நடிகர்களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விவேக். மாரடைப்பால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை 4.35 மணிக்கு சிகிச்சை பலனின்றி காலமானார். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் அவருடைய உடலுக்கு ஏராளமான ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சின்னக் கலைவாணர் விவேக்கின் மறைவு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அதில்,  தமிழ்த் திரையுலகினராலும், திரைப்பட ரசிகர்களாலும் “சின்னக்கலைவாணர்" என அழைக்கப்படுவரும், தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற நடிகருமான திரு. விவேக் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை (17.4.2021)) உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த மன வேதனை அடைந்தேன். திரு. விவேக் அவர்கள் தலைமைச் செயலகத்தில் பணியாற்றி பின்னர் திரைப்படத்துறையில் நாட்டம் கொண்டு “மனதில் உறுதி வேண்டும்" என்ற படத்தின் மூலம் நடிகராக தன்னுடைய கலையுலக வாழ்க்கையைத் தொடங்கினார். 

Cm Edappadi palanniswami mourns viveks passed away

சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் சிறந்த நடிகராக தன்னுடைய ஆளுமையை கோலோச்சியவர். திரு. விவேக் அவர்களின் நடிப்பில் வெளிவந்த "திருப்பதி ஏழுமலை வெங்கடேசா” “உன்னருகே நானிருந்தால்”, “பூவெல்லாம் உன் வாசம்”, “அந்நியன்”, “சிங்கம்”, “உத்தம புத்திரன்”, “வெடி”, “பெண்ணின் மனதைத் தொட்டு”, “பட்ஜெட் பத்மநாபன்”, “தூள்" போன்ற எண்ணற்ற திரைப்படங்களில் இவரது நடிப்பு சிரிக்க வைத்ததோடு மட்டுமின்றி சிந்திக்கவும் வைத்தது.

மேலும், திரு. விவேக் அவர்கள், தன்னுடைய சொந்த வாழ்க்கையிலும் சமூக நலனைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்த சமூக ஆர்வலர். இளைஞர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர். சுற்றுச் சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு. பிளாஸ்டிக் தடை மற்றும் கொரோனா பற்றிய விழிப்புணர்வு பணிகளில் அரசிற்கு உறுதுணையாக திகழ்ந்தவர். அதுமட்டுமின்றி, மறைந்த முன்னாள் ஜனாதிபதி திரு. அப்துல்கலாம் அவர்களின் கனவை நினைவாக்கும் வகையில்“கிரீன் கலாம்” என்ற அமைப்பின் மூலம் ஒரு கோடி மரக்கன்றுகள் நடுவதை இலக்காக கொண்டு, அதனை தீவிரமாக செயல்படுத்தி வந்தவர்.

Cm Edappadi palanniswami mourns viveks passed away

திரு. விவேக் அவர்கள் மிகவும் எளிமையானவர். பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். கலைத்துறையில் இவருடைய ஈடு இணையற்ற பங்களிப்பிற்காக மத்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது, தமிழக அரசால் வழங்கப்படும் கலைவாணர் விருது மற்றும் சிறந்த நகைச் சுவை நடிகருக்கான விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள் என எண்ணற்ற விருதுகளைப் பெற்ற சிறப்புக்குரியவர்.

தனது ஈடு இணையற்ற கலைச் சேவையாலும் சமூக சேவையாலும் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த திரு. விவேக் அவர்களின் மறைவு, தமிழ் திரைப்படத் துறைக்கும், ரசிக பெருமக்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் மிகப் பெரிய இழப்பாகும். அவருடைய இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது. அன்னார் மறைந்தாலும், அவருடைய நடிப்பு மற்றும் சமூக சேவை என்றென்றும் தமிழ் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்திருக்கும்.

Cm Edappadi palanniswami mourns viveks passed away

திரு. விவேக் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும், திரைப்படத் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

Follow Us:
Download App:
  • android
  • ios