வரும் 16ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

உலகில் கொரோனா பரவலின் தாக்கம் இன்னும் முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை. கொரோனா பரவலை முற்றிலும் நிறுத்த பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்குவதே ஒரே நம்பிக்கையாக கருதப்படுகிறது. 

இந்நிலையில், கொரோனா நோய்த் தொற்றுக்கான தடுப்பூசி திட்டம் வருகிற ஜனவரி 16ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணி கள வீரர்களாக செயல்படும் 3 கோடி சுகாதார பணியாளர்களுக்குத் தடுப்பூசி முதலில் செலுத்தப்பட உள்ளதாகவும், இதையடுத்து 50 வயதை கடந்தோர். இணையநோய் உள்ள 50 வயதுக்கு குறைவான நபர்கள் என மொத்தமாக 27 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்துவதில் அடுத்தகட்ட முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தமிழகத்தில் வருகிற ஜனவரி 16ம் தேதி கொரோனா தடுப்பூசி திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் அவர் தொடங்கி வைக்க இருக்கிறார்.