அதிமுகவில் உள்ள எம்.எல்.ஏக்களில் சிலர் இன்னும் ஸ்லீப்பர் செயல்களாகவே இருப்பதால் அவர்களை ஆளுங்கட்சியால் கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகிறார்களாம். அவர்களில் சிலர் எப்போது அணி தாவலாம் என நேரம் பார்த்து வருகிறார்கள் எனவும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களில் 8 எம்எல்ஏக்கள் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களை கடந்த தீபாவளிக்குள் இழுக்க முடிவு செய்து பொறுப்புகளை தென்மாவட்ட அமைச்சர்களிடம் ஒப்படைத்து இருந்தார்கள். ஆனால் அவர்களால் தெர்மகோல் விடவும், சைக்கிள் பயணம் செய்யவும் மட்டுமெ நேரம் இருந்ததால் அந்த முயற்சியில் தோற்று விட்டார்கள். 

இப்போது அந்த 18 எம்.எல்.ஏக்களில் செந்தி பாலாஜி திமுகவுக்கு போய்விட்டது நாடறிந்த செய்தி. இன்னும் இருப்பது 17 பேர். இப்போது மீண்டும் அவர்களிடம் பொங்கலுக்குள் இலை கட்சிக்கு இழுத்துவர அசைன்மென்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதற்கான பேரம் தொடங்கி விஸ்வரூபம் எடுத்துள்ளது. படியாதவர்களுக்கு மிரட்டலும் விடுக்கப்பட்டு வருவதாக கூறுகிறார்கள். 

அதாவது, ‘இடைத்தேர்தல் நடந்தாலும், நீங்கள் போட்டியிட முடியாத நிலை ஏற்படும். வேட்புமனு தள்ளுபடியாகலாம். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷாலின் வேட்புமனு தள்ளுபடியானதை நினைச்சு பாருங்க’’ என்ற வகையில் மிரட்டல் விடுக்கப்படுகிறதாம். இதில், முக்கியமாக தங்க தமிழ்செல்வனுக்கு 2 அமைச்சர்கள் தூது மேல் தூது அனுப்பி இருக்கிறார்கள். அவரோ, கடுமையான நிபந்தனைகளை விதித்து இழுத்தடித்து வருகிறார்.

 

அதே சமயம் அவரை கட்சிக்குள் கொண்டு வருவதற்கு, அதே மாவட்டத்தை துணை முதல்வரும், அவரது குடும்பத்தினரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். ‘எங்களை மீறி எப்படி அவர் உள்ளே வருகிறார் என்று பார்ப்போம்’ என்று தங்களது ஆதரவாளர்களிடம் நம்பியாரின் சிரிப்பை உதிர்க்கிறார்களாம். இதனால், அசைன்மென்ட் கொடுக்கப்பட்ட அமைச்சர்கள் திணறி வருகிறார்கள்.