தமிழகத்திலேயே வெறும் மூன்றே மூன்று சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட மாவட்டமென்றால் அது நீலகிரிதான். ஆனால் அரசியல் ரீதியில் இது மிக முக்கியமான இடம். காரணம், முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் முக்கிய கோட்டையான ‘கோடநாடு’ இங்கிருப்பதுதான். ஜெ., வாழ்ந்த காலத்தில் அதுவும் முதல்வராக வாழ்ந்த காலத்தில் கோடநாடானது மினி தலைமை செயலமாகவும், நீலகிரி மாவட்டமானது கிட்டத்தட்ட தலைநகரமாகவுமே பார்க்கப்பட்டது. 

ஜெயலலிதா இருந்தபோது கட்டுக்கோப்பாகதான் இருந்தது நீலகிரி அ.தி.மு.க. ஆனால் அவர் இறப்புக்குப் பின் கோஷ்டி கோஷ்டியாக பிரிந்து மோதிக் கொள்கிறார்கள். அந்தவகையில் இப்போது  கூட்டுறவு சங்க பதவியான ‘நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சேர்மன் பதவி’யை மையமாக வைத்து அம்மாவட்ட அ.தி.மு.க.வின் முக்கிய கைகளுக்குள் பெரும் மோதல் உச்சம் தொட்டு நிற்கிறதாம். 

நீலகிரியை சேர்ந்தவர் மாஜி அமைச்சர் புத்திசந்திரன். இப்போது கழக அமைப்புச் செயலாளராக இருக்கும் இவர், எப்படியாவது தனது அடிவருடிகளுக்கு பெரிய பதவிகள் வாங்கிக் கொடுத்து அவர்களை தன்னை விட்டுப் பிரியாதபடி பார்த்து தன் அதிகாரத்தை மெயிண்டெயின் பண்ண முனைகிறார். தனது கைகளில் ஒருவருக்கு இந்த சேர்மன் பதவியை வாங்கித் தர முனைகிறார். ஆனால் அதேவேளையில் இவருக்கு பெரும் சவாலாக இருக்கிறார் விநோத். 

நீலகிரி மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளராக இருக்கும் இவர், எப்படியாவது இந்த சேர்மன் பதவியை அடைந்தே தீருவது என துடியாய் துடிக்கிறாராம். அதற்காக மாவட்ட செயலாளர் அர்ஜுனனின் முழு சப்போர்ட்டையும் பெற்று வைத்திருக்கும் இவர், புத்திசந்திரனை ஓட ஓட விரட்டிவிட்டு இந்த பதவியை பிடிக்க முழு ஈடுபாடு காட்டி வருகிறார். 

இந்நிலையில் இந்த இரண்டு கோஷ்டிகளுமே முதல்வர் வரை தங்கள் அணிக்காக சிபாரிசுக்கு சென்றுள்ளனர். இரண்டில் யாரை டிக் அடிப்பது என்பதில்தான் எடப்பாடிக்கு சிக்கலே. ஒருவருக்கு கொடுத்துவிட்டு இன்னொருவரை டீலில் விடுவதற்கு எடப்பாடிக்கு துணிவில்லையாம். காரணம்?...”எனக்கு கொடுக்காமல் எதிரணிக்கு அந்தப் பதவியை தூக்கிக் கொடுத்தாங்கன்னா, அப்படியே கூண்டோட என் ஆதரவாளர்களைக் கூட்டிட்டு தினகரன் அணிக்கோ இல்லே தி.மு.க.வுக்கோ போயிடுவேன்” என்று ரெண்டு தரப்புமே முதல்வரின் காதுபட பேசிவிட்டு வந்திருக்கிறார்களாம் இரு தரப்புமே. நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் எதையாவது சிக்கலை இப்படி இழுக்க வேண்டுமா? என்று நொந்து நிற்கிறாராம் முதல்வர். என்ன கொடுமை சார்!