கடந்த சில நாட்கள் வரை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது கடும் அதிருப்தி, கோபத்தில் இருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் அவருடன் சகஜமாகிவிட்டது தான் தற்போது கோட்டையில் ஹாட் டாபிக்.

மார்ச் மாதல் முதல் ஏப்ரல் இறுதி வரை கொரோனா கட்டுப்பாட்டில் மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்து வந்தது தமிழகம். இந்த விவகாரத்தில் மற்ற மாநிலங்கள் வெளிப்படையாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை பாராட்டின. சமூக வலைதளங்களில் விஜயபாஸ்கருக்கு ஆதரவாக பல்வேறு விஷயங்கள் பகிரப்பட்டன. இதனால் திடீரென விஜயபாஸ்கர் ஹீரோ ரேஞ்சுக்கு மிகைப்படுத்தப்பட்டார். இந்த நிலையில் திடீரென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பு நடவடிக்கையில் நேரடியாக களம் இறங்கினார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் ஓரம்கட்டப்பட்டார். சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் முன்னிலைப்படுத்தப்பட்டார். மேலும் மிக முக்கியமான ஆலோசனைகளில் கூட சுகாதாரத்துறை அமைச்சர் என்கிற வகையில் விஜயபாஸ்கரை அழைக்காமல் இருந்து வந்தனர். தினமும் செய்தியாளர்களை சந்தித்து வந்த விஜயபாஸ்கர் செய்தியாளர்களை பார்த்தாலே தலை தெறிக்க ஓடினார். அதற்கு முன்பு வரை விஜயபாஸ்கர் தரப்பில் இருந்து அவரது பணிகள் தொடர்பான வீடியோக்கள் எக்ஸ்க்ளுசிவாக செய்தியாளர்களுக்கு பகிரப்பட்டு வந்தன. இதனால் ஊடகங்களிலும் விஜயபாஸ்கர் தனி இடம் பிடித்தார்.

ஆனால் முதலமைச்சர் ஒதுக்கிய பிறகு எந்த செய்தி சேனல்களும் விஜயபாஸ்கரை செய்தியாக கூட ஒளிபரப்ப தயங்கின. கொரோனா விவகாரத்தில் பீலா ராஜேஷ், தலைமைச் செயலாளர் சண்முகம் மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட்டனர். ஒரு கட்டத்தில் விஜயபாஸ்கர் புதுக்கோட்டைக்கு சென்று அங்கு சில நாட்கள் இருக்கும் அளவிற்கு அவர் மீதான அதிருப்தி அதிகரித்ததாக கூறினார்கள். இந்த நிலையில் தான் திடீரென கடந்த மாதம் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றப்பட்டார்.

விஜயபாஸ்கரையே முதலமைச்சர் மாற்ற திட்டமிட்டிருந்தாகவும் முதற்கட்டமாக பீலா ராஜேஷ் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனால் சற்று அதிர்ச்சியுடன் தான் விஜயபாஸ்கர் சுற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக விஜயபாஸ்கர் செய்திகளில் மீண்டும் பழைபடி அடிபட ஆரம்பித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பை முன்பு போல் உற்சாகமாக நடத்துகிறார். எந்த விஷயத்திற்கும் தயங்காமல் பேசுகிறார். பழையபடி விஜயபாஸ்கரை முன்னிலைப்படுத்தும் வீடியோக்கள் அவர் தரப்பில் இருந்து பகிரப்படுகின்றன.

இரண்டு நாட்களுக்கு முன்னர் நள்ளிரவில் மருத்துவமனைக்கு ஆய்வுக்கு சென்ற விஜயபாஸ்கர் அப்போது மருத்துவர்களை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அந்த வீடியோ பதிவு அனைத்து செய்தி சேனல்களுக்கும் பகிரப்பட்டன. இதே போல் மருத்துவர்கள் தினத்தன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவிக்க அமைச்சர் விஜயபாஸ்கரை தொடர்பு கொண்டார். இதனை கூட வீடியோவாக  பதிவு செய்து விஜயபாஸ்கர் தரப்பில் இருந்து ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதில் விஷயம் என்ன என்றால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரடியாக அமைச்சர் விஜயபாஸ்கரைஅழைத்து பேசியது தான். அதையும் கூட வீடியோவாக பதிவு செய்து அமைச்சர் விளம்பரம் தேடிக் கொண்டது தான். சில வாரங்களுக்கு முன்பு வரை முடிந்தவரை செய்திகளில் அடிபடாமல் பார்த்துக் கொண்ட அமைச்சர் தற்போது மீண்டும் சுறுசுறுப்பு காட்டி வருகிறார். இதற்கு மீண்டும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் குட்புக்கில் விஜயபாஸ்கர் இடம் பிடித்தது தான் காரணம் என்கிறார்கள். திடீரென என்ன மாயம் நடந்ததோ தெரியவில்லை விஜயபாஸ்கர் பழைய நிலைக்கு திரும்பிவிட்டார் என்பது தான் கோட்டையில் ஹாட் டாபிக்காக சென்று கொண்டிருக்கிறது.