அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சரும் தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ள தோப்பு வெங்கடாசலம் அதிரடியாக விலகியுள்ளார். முதல்வர் எவ்வளவோ சமாதானம் செய்தும் அதை ஏற்காத தோப்பு வெங்கடாசலம் ராஜினாமா கடிதத்தை அவரிடம் வழங்கினார். 

ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளரும், தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான கருப்பணனுக்கும், முன்னாள் அமைச்சரும், பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ.,வுமான தோப்பு வெங்கடாசலத்திற்கும் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து பனிப்போர் நிலவி வருகிறது. சமீப காலமாக பெருந்துறை தொகுதியில் கருப்பணன் தனியாக கோஷ்டி சேர்ப்பது அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் பெருந்துறை அதிமுக., எம்.எல்.ஏ., தோப்பு வெங்கடாசலம், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் மீது நடவடிக்கை எடுக்க கூறி முதல்வருக்கு கடிதம் எழுதினார். ஆனால், அமைச்சர் மீது கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

இந்நிலையில், கடும் அதிருப்தியில் இருந்து வந்த தோப்பு வெங்கடாசலம் அதிமுவில் இருந்து விலகுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கும் ராஜினாமா கடிதத்தை அனுப்பி இருந்தார். இதனையடுத்து நேற்று மாலை காரில் சேலம் வந்த தோப்பு வெங்கடாசலம். முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து, தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அப்போது கார் டிரைவர் மட்டுமே அவருடன் வந்திருந்தார். 

முதல்வர் வீட்டுக்கு சில நிமிடங்களில் அதிமுக மாநில இளைஞர் பாசறை செயலாளர் வைகைச்செல்வன், நாமக்கல் எம்.பி. சுந்தரம் ஆகியோர் முதல்வர் இல்லத்திற்கு வந்தனர். முதல்வரிடம் பேசிய தோப்பு வெங்கடாசலம் கட்சியில் தனக்கு முக்கியத்துவம் இல்லை என்பது உள்ளிட்ட பல்வேறு புகார்களை வேதனையுடன் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதையெல்லாம் கேட்ட முதல்வர், தொடர்ந்து அவரை சமாதானப்படுத்தியதோடு, சில உறுதிகளையும் அளித்துள்ளார். ஆனால் அதனை ஏற்க தோப்பு வெங்கடாசலம் மறுத்துவிட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.