தென்மாவட்டங்களை சேர்ந்த தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் ஆளுநரை இன்று எடப்பாடி பழனிசாமி சந்திக்க இருப்பது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கமாக மாதம் ஒருமுறை ஆளுநரை மரியாதை நிமித்தமாக சந்திப்பதை எடப்பாடி பழனிசாமி வழக்கமாக வைத்திருக்கிறார். ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் தமிழகம் வந்தது முதலே வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாமல் அவரை நேரில் சென்று சந்திப்பது எடப்பாடியாரின் வழக்கம். ஆளுநருடன் சுமூகமான உறவை வைத்துக் கொள்வதுடன் டெல்லிக்கும் தனக்கும் ஒரு பாலமாக ஆளுநர் இருக்க வேண்டும் என்று நினைத்தே இந்த செயலில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் ஆளுநரும் கூட தமிழர்கள் ஏழு பேர் விடுதலை தவிர மற்ற அனைத்து விஷயங்களிலும் எடப்பாடி அரசுக்கு அனுசரணையாகவே நடந்து கொண்டு வருகிறார்.

இதே போல் கொரோனா கால கட்டத்திலும் மாதம் ஒரு முறை தவறாமல் ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்து நிலவரத்தை நேரில் எடுத்து கூறி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. இந்த செயல் ஆளுநர் பன்வாரிலாலை மிகவும் கவர்ந்துவிட்டதாக சொல்கிறார்கள். அதனால் தான் எடப்பாடி பழனிசாமி சந்திக்க வேண்டும் என்று கூறினால் உடனடியாக அதற்கு தேதி, நேரம் கொடுக்கப்படுகிறது என்று கூறுகிறார்கள். அந்த வகையில் இன்று மாலை ஐந்து மணிக்கு ஆளுநர் பன்வாரிலாலை சந்திக்கிறார் எடப்பாடியார்.

இதற்கு முன்பு எடப்பாடியார் ஆளுநரை சந்தித்த போது அது நிர்வாகப்பணிகளுக்காக என்று விளக்கம் அளிக்கப்பட்டது. இதே போல் இன்றைய சந்திப்பும் நிர்வாகப்பணிகளுக்காகவே என்று சொல்லப்பட்டாலும் உண்மையில் இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கலாம் என்று சொல்கிறார்கள். ஏனென்றால் அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளரை மையமாக வைத்து ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே மோதல் மூண்டுள்ளது. நாளை மறுநாள் முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்க வேண்டிய நெருக்கடியில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்.

இந்த சூழலில் ஓபிஎஸ் சென்னையில் இருந்து புறப்பட்டு தேனி சென்றுவிட்டார். அங்கு தனது பண்ணை வீட்டில் ஆதரவாளர்களை சந்தித்து பேசி வருகிறார். முதல் நாள் ஆலோசனையின் போது பெரிய அளவில் முக்கிய நிர்வாகிகள் யாரும் வரவில்லை. ஆனால் ஞாயிறன்று நடைபெற்ற ஆலோசனையில் ஒரு சில எம்எல்ஏக்களும் ஓபிஎஸ்சை சந்தித்து பேசியுள்ளனர். ஏற்கனவே அமைச்சர் பதவியை பறிகொடுத்த ராமநாதபுரம் எம்எல்ஏ மணிகண்டனும் ஓபிஎஸ்சை சந்தித்து பேசினார். இப்படி ஓபிஎஸ்சை சந்தித்து பேசிய எம்எல்ஏக்கள் அனைவருமே ஓபிஎஸ்சின் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.

இதனால் தனக்கான ஆதரவை அதிகரித்துக் கொண்டு எடப்பாடிக்கு எதிராக காய் நகர்த்த ஓபிஎஸ் தயாராவதாக சொல்கிறார்கள். இந்த நிலையில் தான் எடப்பாடி பழனிசாமி ஆளுநரை இன்று மாலை சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக தான் தேர்வு செய்யப்பட உள்ளதை ஆளுநரிடம் நட்பு அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி கூற உள்ளதாக சொல்கிறார்கள். இந்த தகவலை ஆளுநர் டெல்லி மேலிடத்திற்கு பாஸ் செய்வார் என்று எடப்பாடி நம்புகிறார். இதன் மூலம் டெல்லி இந்த விவகாரத்தில் என்ன செய்கிறது என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ளவும் எடப்பாடி ஆர்வமாக இருக்கிறார்.

மேலும் தான் முதலமைச்சர் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவதை ஆளுநர் எப்படி பார்க்கிறார், அவரது மன ஓட்டம் என்பதையும் அறிந்து கொள்ள எடப்பாடி இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்ததாக கூறுகிறார்கள். இதற்கு முன்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் ஓபிஎஸ்சுடனும் நெருக்கமாக இருந்தார். ஆனால் பன்வாரிலால் புரோஹித் – ஓபிஎஸ் இடையே பெரிய அளவில் நட்பு இல்லை என்கிறார்கள். எனவே டெல்லி முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் தன் மீது அதிருப்தி அடைந்தால் பன்வாரிலால் மூலமாக அதனை சரி செய்ய முடியுமா என ஆழம்பாக்கவும் எடப்பாடி தயாராகி வருவதாக சொல்கிறார்கள்.