அனைத்து அதிமுக எம்.எல்.ஏக்களும் வரும் 6ம் தேதி சென்னை வர அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் 7ல் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு வெளியாகலாம் என்ற நிலையில் அதிமுக எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2021ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் அதிகார போட்டி உச்சத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்திலும் இந்த பிரச்சனை எதிரொலித்தது. சுமார் 5 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எடுக்கபடவில்லை.

பின்னர், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அக்டோபர் 7ம் தேதி கூட்டாக அறிவிப்பார்கள் என்று கே.பி.முனுசாமி தெரிவித்திருந்தார். இதனிடையே, முதல்வர் எடப்பாடி பங்கேற்கும் நிகழ்ச்சிகளை கடந்த சில நாட்களாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் தவிர்த்து வந்தார். மேலும், இருவரும் அவரது ஆதரவாளர்களுடன் அடிக்கடி ஆலோசனையும் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அக்டோபர் 6-ம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் சென்னை வர கட்சித் தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது.அக்டோபர் 7-ம் தேதி அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்? என்பது அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதிமுக எம்எல்ஏக்களின் கருத்துகளை கேட்டறிய, அனைவரையும் அக்டோபர் 6-ம் தேதி சென்னை வர கட்சித் தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.