விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெறும் நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், வீட்டுக்காவலில் வைக்கவில்லை என போலீசார் மறுத்துள்ளனர்

மத்திய அரசு நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி எல்லையில் 13வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக இன்று நாடு முழுவதும் பாரத் பந்த்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி பல இடங்களில் விவசாய சங்கத்தினர், இடதுசாரி கட்சியினர் ஆர்பாட்டம், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் நேற்று விவசாயிகளுக்கு முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்து டெல்லி விவசாய சங்கத்தினரை சந்தித்தார். மேலும் டெல்லி அரசு விவசாயிகளுக்கு தேவையான வசதிகளை செய்து தரும் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆம்ஆத்மி கட்சி நிர்வாகிகள் புகார் தெரிவித்துள்ளனர். 

மேலும், அவரை யாரையும் சந்திக்க அனுமதிக்கவில்லை எனவும், வீட்டில் இருந்து வெளியே செல்ல யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை ஆம்ஆத்மி கட்சி டுவிட்டர் பதிவில் தெரிவித்திருந்தது. இது தொடர்பாக போலீசார் தரப்பில் கூறுகையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை வீட்டுக்காவலில் வைக்கவில்லை. அவர் எங்கு வேண்டுமோ செல்லலாம் என கூறியுள்ளனர்.