தமிழக அரசு தொடக்கப் பள்ளிகளில் குறைந்த அளவில் மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளை மூட அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

வரும் கல்வி ஆண்டு முதல் 800 அரசு தொடக்க பள்ளிகளை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிகிறது. 10 மாணவர்களுக்கும் குறைவாக
படிக்கும் அரசு தொடக்க பள்ளிகள் மூடப்பட உள்ளன. மூடப்படும் தொடக்கப் பள்ளி மாணவர்கள், அருகில் உள்ள அரசு பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் செய்தி வெளியாகி உள்ளது. அதேபோல், மூடப்படும் பள்ளி ஆசிரியர்கள் மற்ற பள்ளிகளுக்கு மாற்றப்பட உள்ளதாகவும் தெரிகிறது.

மாணவர்கள் குறைந்த தொடக்க பள்ளிகள் குறித்து தமிழக அரசு அடையாளம் கண்டுள்ளதாகவும், 800 பள்ளிகள் மூடுவது பற்றிய அரசாணை இன்னும் ஓரிரு
நாட்களில் வெளியாக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. எந்தெந்த பள்ளிகள் மூடப்படும என்பது குறித்த பட்டியல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இந்த கல்வி ஆண்டு முதல் 800 பள்ளிகள் செயல்படாது என்று கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது. 

தனியார் பள்ளிகளை நோக்கி மாணவர்கள் செல்வதால், அரசு பள்ளிகளின் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த நிலையில், ஜாக்டோ ஜியோ நிர்வாகி இளமாறன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது, 800 தொடக்க பள்ளிகளை மூடும் அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கவுமே, அரசு பள்ளிகள் மூடப்படுவதாகவும், அரசு தொடக்க பள்ளிகளை மூடும் முடிவை கைவிடுமாறும் அவர் வலியுறுத்தினார்.

பெற்றோர் ஆசிரியர் சங்கம் அருமைநாதன் கூறும்போது, தனியார் பள்ளியின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தாமல், அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை இல்லை என்று கூறி தொடக்கப் பள்ளிகளை மூடுவது ஏன் என்று கேள்வி எழுப்பினார். 5 சதவீதமாக இருந்த தனியார் பள்ளி தற்போது 45 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் அரசுதான் என்றும், அரசு அங்கீகாரம் அளிப்பதால்தான் தனியார் பள்ளிகள் துவக்கப்படுகின்றன என்றும் அவர் குற்றம் சாட்டினார். தனியார் பள்ளிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தாமல் அரசு பள்ளிகளை மூடுகிறோம் என்று அரசு சொல்வது எந்த விதத்தில் நியாயம் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

800 பள்ளிகள் மூடப்பட உள்ளதாக கூறப்படும் நிலையில், பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.