வெளிநாடுகளில் உள்ளதை போல் தமிழகத்தின் பள்ளிகளையும் சுத்தம் மற்றும் சுகாதாரத்துடன் வைத்துக் கொள்ள ஜெர்மனியுடன் இணைந்து அமைச்சர் செங்கோட்டையன் அட்டகாசமான ஒரு திட்டத்தை உருவாக்கியுள்ளார்.

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் கூறியதாவது:- மாணவ மாணவிகளின் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாணாக்கரின் கல்வித்திறனை மேம்படுத்த பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன. நீட் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராக தமிழக அரசே மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளித்து வருகிறது. மேலும் தமிழக மாணவர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் தேர்வில் அதிகம் வெற்றி பெற வேண்டும் என்று தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது.

இதற்காக தமிழகத்தில் உள்ள முக்கிய நூலகங்களில் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் விரைவில் துவங்கப்பட உள்ளது. இந்த பயிற்சி மையத்தில் திறன்வாய்ந்த மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு இலவசமாக பயிற்சி அளிக்கப்படும். இதன் மூலம் தமிழக மாணவர்கள் அதிக அளவில் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற முடியும். மாணவர்களின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை போலவே அவர்கள் படிக்கும் பள்ளிகளிலும் சுத்தம் சுகாதாரத்தை பேண புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

தற்போது பள்ளிகளில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள போதுமான பணியாளர்கள் இல்லை. இருக்கும் துப்புரவு பணியாளர்களும் வயது முதிர்ந்தவர்களாக உள்ளனர். இதனால் பள்ளிகளை சுத்தமாக பராமரிப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இந்த பிரச்சனையை போக்க ஜெர்மனியில் பள்ளிகளை சுத்தமாக வைத்துக் கொள்ளும் டெக்னிக்கை தமிழகத்தில் அறிமுகம் செய்ய உள்ளோம்.

இதற்காக ஜெர்மனியில் இருந்து 1000 வாகனங்களை வாங்க உள்ளோம். சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள தேவையான நவீன உபகரணங்கள்கொண்ட  இந்த வாகனங்கள் மூலம் பள்ளிகளை சுத்தமாக

பராமரிக்க முடியும். மேலும் சுழற்சி முறையில் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு பள்ளியில் இந்த வாகனங்கள் சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ளும். இதன் மூலம் மாணவர்கள் சுத்தமான சூழலில் கல்வி கற்க முடியும்.

 இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.