நாட்டை குட்டிச்சுவராக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. பல நூறு ஆண்டுகளாக ஒற்றுமையாக இருந்து வருவோரிடம் விஷத்தை கலக்குகிறார்கள் என மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் திமுக போராட்டம் நடத்தியது. காஞ்சிபுரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின்;- குடியுரிமை சட்டமா இல்லை குழிப் பறிக்கும் சட்டமா? என இந்த ஆர்ப்பாட்டத்தில் முழங்கினோம். அது உண்மைதானே, ஏதோ பழமொழி சொல்வார்களே, ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு. அது போல் உள்ளது குடியுரிமை திருத்த சட்டம்.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என ஐ.நா.வில் பிரதமர் பேசுகிறார் அப்படியானால் இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டம் தேவையா? என கேள்வி எழுப்பினார். மத்திய பாஜக அரசு வேலைவாய்ப்பும் வழங்கவில்லை, விவசாயிகளின் வருமானத்தையும் உயர்த்தவில்லை. இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்காத சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். வழக்குகளை கண்டு அஞ்சி ஒடுங்குகிற இயக்கம் அல்ல திமுக. 

மக்களைப்பற்றி கவலைப்பட்டு இருந்தால் பொருளாதாரத்தை உயர்த்தி இருப்பார்கள். எதையும் செய்ய முடியாத கொடுமையான ஆட்சி மத்தியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாட்டை குட்டிச்சுவராக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. பல நூறு ஆண்டுகளாக ஒற்றுமையாக இருந்து வருவோரிடம் விஷத்தை கலக்குகிறார்கள் என மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.