தமிழக பாஜகவில் அடுத்தடுத்து பிரபலங்கள் மற்றும் மாற்று கட்சியினர் இணைந்து வருவது திமுக, அதிமுக உள்ளிட்ட திராவிட கட்சிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு, இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் பணிகளை, தமிழக பாஜக அசுர வேகத்தில் செய்து வருகிறது. தற்போது வரை அதிமுக  கூட்டணியில் பாஜக இருந்தாலும், தனது தனிப்பட்ட செல்வாக்கை உயர்த்த தொடங்கியுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும், மாற்று கட்சியினர் பாஜகவில் இணைவது, தொடர் கதையாகி வருகிறது. அதேபோல, பிரபலங்களும், பாஜகவை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், தமிழக பாஜவில் நடிகர்கள் ராதாரவி, எஸ்.வி.சேகர், நடிகைகள் நமீதா, காயத்ரி ரகுராம், குட்டி பத்மினி, ஜெயலட்சுமி, மதுவந்தி என்று பட்டாளமே உள்ளது. இதில், சிலருக்கு கட்சியில் பதவி வழங்கப்பட்டுள்ளது. இன்னும் சிலர் கட்சியில் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். இவர்கள் தேர்தல் மற்றும் பொதுக்கூட்டங்களில் பேசுவதற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், நடிகை குஷ்பு, முன்னாள் வருமான வரித்துறை அதிகாரி சரவணகுமார், பத்திரிகையாளர் மதன் ரவிச்சந்திரன் ஆகியோர் நேற்று பாஜகவில் இணைந்தனர். குஷ்புக்கு கட்சியில் முக்கியமான பதவி வழங்கப்படும் என்று தெரிகிறது. அவரை வர உள்ள சட்டப்பேரவை தேர்தலில் தீவிர பிரசாரத்துக்கு பயன்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளது. குஷ்பு எல்லாருக்கும் நன்கு தெரிந்தவர், அது மட்டுமல்லாமல் சிறப்பாக பேசக்கூடியவர் என்பதால் அவர் மக்களை எளிதில் கவர்ந்து விடுவார் என்பதற்காக அவரை கட்சியில் சேர்த்ததாக கூறப்படுகிறது.