சசிகலா மீண்டும் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சசிகலா தனது முடிவை முறுபரிசீலனை செய்யவேண்டும் என வலியுறுத்தி வருகிறன்றனர். 

தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக  சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கை தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறையில் இருந்து வந்தவுடன் அதிமுகவை அவர் கைப்பற்ற போகிறார் என கூறப்பட்டு வந்த நிலையில், ஒட்டுமொத்தமாக அரசியலை விட்டே விலக போவதாக அவர் அறிவித்திருப்பது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் என்றும் வணங்கும் என் அக்கா புரட்சித்தலைவி எண்ணத்திற்கிணங்க அவர் கூறியபடி இன்னும் நூற்றாண்டுக்கு மேலாக தமிழகத்தில் புரட்சித்தலைவர் மற்றும் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் பொற்கால ஆட்சி தொடர ஒரு தாய் வயிற்று பிள்ளைகளாக அம்மாவின் உண்மை தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்ற வேண்டும். 

நம்முடைய பொது எதிரியை, தீய சக்தி என்று அம்மா நமக்கு காட்டிய திமுகவை ஆட்சியில் அமர விடாமல் தடுத்து விவேகமாக இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட அம்மாவின் தொண்டர்கள் பாடுபட வேண்டும். அம்மா அவர்கள் உயிருடன் இருந்தபோது எப்படி என் எண்ணத்தை செயல்படுத்தி சகோதரியாக இருந்தேனோ அவர் மறைந்த பிறகும் அப்படித்தான் இருக்கிறேன். நான் என்றும் பதவிக்காகவும் பணத்திற்காகவும் அதிகாரத்திற்காகவும் ஆசைப்பட்டதில்லை. என உருக்கமாக கூறியுள்ளார். அவரின் இந்த முடிவை பலரும் வரவேற்றிருந்தாலும் அவரது ஆதரவாளர்கள் மிகுந்த ஏமாற்றமும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். 

இந்நிலையில் இன்று காலை 8 மணியிலிருந்து சென்னை தி நகரில் உள்ள அவரது வீட்டின் முன்பு பல மாவட்டங்களில் இருந்து வந்த சின்னம்மா பேரவை தொண்டர்கள் 10 நபர்களுக்கும் மேல் சாலையில் அமர்ந்து தர்ணா போராடத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் அனைவரும் சசிகலா அவர்கள் எடுத்த முடிவை மறு பரிசீலனை செய்து மீண்டும் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். மேலும் போராட்டம் நடப்பதை அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை அப்புறப்படுத்த முயற்சித்தனர். ஆனால் அவர்கள் காவல் துறையினர் கூறிய எதையும் பொருட்படுத்தாமல் வி.கே. சசிகலாவின் வீட்டின் முன் அமர்ந்து சின்னமா முடிவை மாற்றிக் கொள்ளுங்கள் என கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.