கன்னியாகுமரியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் தலைமறைவாக இருந்து வந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் கைது செய்யப்பட்டுள்ளார். 

நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன். 2011 முதல் 2016 வரை எம்.எல்.ஏ.வாக இருந்தார். இவர் இதே தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். கட்சியின் பல மாநில பொறுப்புகளையும் வகுத்து வந்த அவர், ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர் டிடிவி தினகரன் அணியில் சேர்ந்தார். பின்னர் மீண்டும் அதிமுகவில் இணைந்திருந்தார். நேற்று முன்தினம் இவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். 

இந்நிலையில் நாகர்கோவில் கோட்டாறை சேர்ந்த 15 வயதான 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நாஞ்சில் முருகேசன் மீது நேற்று நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதனையடுத்து, தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அவர் நெல்லை மாவட்டம் உவரியில் பதுங்கியிருந்ததாக கூறப்படுகிறது.